மிசா காலத்தில் கொடுமைகளைச் சந்தித்த முக்கியத் தலைவர்களில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒருவர் என்றும், அந்த வரலாறை எப்போதும் எவரும் மறுக்க முடியாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கூட்டணி, பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரம் மற்றும் முதலமைச்சர் விஜய் பேச்சு குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐந்து ஆண்டுகளுக்கும் முழு ஆதரவு அளிக்கும் என்று திருமாவளவன் கூறினார். தேர்தல் கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளும் தற்போதைக்கு இறுதி முடிவெடுக்கவில்லை என்றாலும், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் அவை தொடர்ந்து நீடிப்பதாகத் தெரிவித்தார். இடைத்தேர்தலில் வேட்பாளரைத் தேர்வு செய்யும் முழு அதிகாரம் கூட்டணித் தலைமை வகிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கே உள்ளது என்றும், விசிக அக்கூட்டணியில் உள்ளதால் தவெக வேட்பாளரின் வெற்றிக்கு முழுமையாகத் துணை நிற்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: ஸ்டாலினிடம் வீடு தேடிப்போய் ‘சாரி’ கேட்ட விஜய்... விடிந்ததுமே வீடியோ வெளியிட்டு தரமான பதிலடி...!
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே அரசு இறுதி முடிவை எடுக்கும் என நம்புவதாகத் திருமாவளவன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மிசா காலத்தில் திமுக தலைவர்கள் பலர் சிறைப்பட்டு கொடுமைகளுக்கு ஆளானார்கள் என்றும், அதில் மு.க.ஸ்டாலினும் ஒருவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். மேலும், தமது கருத்து புண்படுத்தியிருந்தால் வருந்துவதாக முதலமைச்சர் விஜய் கூறியிருப்பதையும், அது உள்நோக்கத்தோடு சொல்லப்பட்டதல்ல என தவெக தெளிவுபடுத்தியிருப்பதையும் விசிக ஏற்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்! திமுக வேட்பாளராக சேது செல்வம் அறிவிப்பு!