சென்னை, ஜனவரி 6: தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடலோரப் பகுதிக்கு அருகே உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதற்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
பிரதீப் ஜான் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவின்படி, ஜனவரி 8 அல்லது 9ஆம் தேதி முதல் ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகளிலும் உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். கடந்த 5 ஆண்டுகளாக எல் நினோ, லா நினோ அல்லது இயல்பான பருவநிலை இருந்த போதிலும், ஜனவரி மாதத்தில் தமிழகம் அதிக மழை பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக, தமிழகத்தில் ஜனவரி மாதம் மிகக் குறைந்த மழை பெய்யும் மாதமாகும். நீண்டகால சராசரி மழையளவு வெறும் 12.3 மி.மீ. மட்டுமே. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 5ஆம் தேதி வரை ஏற்கனவே 7.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த சுற்று மழையுடன் இந்த மாதம் முழுவதும் அதிக மழை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!! தமிழகத்தில் மீண்டும் கனமழை!! வெதர் அப்டேட்!
கடந்த 5 ஆண்டுகளின் ஜனவரி மழையளவு:
- 2026: 7.8 மி.மீ. (ஜனவரி 5 வரை)
- 2025: 24.3 மி.மீ. (அதிகம்)
- 2024: 50.5 மி.மீ. (மிக அதிகம்)
- 2023: 5.1 மி.மீ. (குறைவு)
- 2022: 34.8 மி.மீ. (அதிகம்)
- 2021: 139.3 மி.மீ. (மிக மிக அதிகம்)
டெல்டா மாவட்டங்கள் (நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர்) மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், தென் தமிழகத்திலும் 4 நாள்களில் குறைந்தது 1 அல்லது 2 நாள்கள் மழை பெய்யும். கொங்கு மண்டலத்திற்கும் மழை கிடைக்கும்.

கனமழை எச்சரிக்கை: டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது.
விவசாயிகளுக்கு அறிவுரை: ஜனவரி 9ஆம் தேதிக்கு முன் அறுவடைப் பணிகளை முடிப்பது நல்லது என்று பிரதீப் ஜான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையிலும் இதே காலகட்டத்தில் மழை பெய்யும். ஆனால், திட்வா புயல் போன்ற அதி கனமழை இருக்காது. இருப்பினும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. வெள்ள அபாயம் இல்லை என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மழை முன்னறிவிப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்த 7 நாட்களுக்கு அடித்து ஊற்றப்போகும் மழை! தமிழகம், புதுச்சேரிக்கு அலர்ட்! வானிலை அப்டேட்!