தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் முழுவதும் மீண்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று (டிசம்பர் 11) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 14ம் தேதி வரை தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற தமிழகப் பகுதிகளிலும் புதுச்சேரியிலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
டிசம்பர் 15 அன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கும்.
இதையும் படிங்க: நிரம்பாத நீர்த்தேக்கங்கள்! பருவமழை பெய்தும் பலனில்லை!! தமிழக நீர்வளத்துறை அப்செட்!
டிசம்பர் 16 அன்று கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் தமிழகம் முழுவதும் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் இருக்கும். மழை பெய்ய வாய்ப்பு குறைவு.
கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 20 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை, வேதாரண்யம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி ஆகிய இடங்களில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
விவசாயிகளும், பொதுமக்களும் மழை முன்னெச்சரிக்கையை கவனத்தில் கொண்டு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்! இடி, மின்னலுடன் கொட்டக் காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்!