வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (ஜனவரி 10) இலங்கையின் வடக்கு கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய இந்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நேற்று நிலவரப்படி இது இலங்கையின் மட்டக்களப்புக்கு கிழக்கே சுமார் 170 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும் இருந்தது. இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையின் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே கரையை கடக்கும்.
இதன் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று பல இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை (12-20 செ.மீ. அளவுக்கு) பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலெர்ட் (ஆரஞ்சு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம்! வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு! கனமழை அலர்ட்!

மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை (ஜனவரி 11) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடரலாம்.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் மழை, காற்று காரணமாக ஏற்படக்கூடிய சாலை வெள்ளம், மரங்கள் சாய்தல் போன்றவற்றுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம்! வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு! கனமழை அலர்ட்!