தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான NABARD-ன் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ.350 கோடி நிதியையும் விரைவாக விடுவிக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லியில் நேரில் சந்தித்து மத்திய நிதியமைச்சரிடம் வழங்கினர்.

இந்த சந்திப்பு டெல்லியில் நாளை நடைபெறவுள்ள ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்றது. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், குறிப்பாக வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டிற்கும் இந்த நிதி மிகவும் முக்கியமானது என முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். NABARD-இன் நிதியுதவியானது மாநிலத்தின் உள்கட்டமைப்பு, விவசாயிகளின் நலன் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நிதி ஒதுக்கீடு உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: துணை ஜனாதிபதி தேர்தல் - முதல்வரின் முடிவே என் முடிவு.. கமல்ஹாசன் எம்.பி கருத்து..!!
திமுக எம்.பி. கனிமொழி மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தமிழகத்தின் நிதித் தேவைகள் மற்றும் இந்த ஒதுக்கீட்டின் அவசியத்தை விளக்கினர். இந்த நிதி விடுவிப்பு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்பு, மாநிலத்தின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் இந்தக் கோரிக்கை குறித்து உரிய பரிசீலனை செய்வதாக உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி விடுவிப்பு தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில், குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னைச் சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு!! மு.க.ஸ்டாலின் எழுப்பிய 7 கேள்விக்கு தேர்தல் ஆணையம் நச் பதில்!!