தூயசக்திக்கு அர்த்தம் தெரியுமா தமிழக முதல்வரே என்று பாஜக மூத்த தலைவர் H.ராஜா கேள்வி எழுப்பினார். தூயசக்தி எனும் தூய்மையான ஆட்சிக்கு அர்த்தம் தெரியாத தமிழக முதல்வர் ஜோசஃப் விஜய் கவனத்திற்கு என்று குறிப்பிட்டார். நியாயம், நீதி,உண்மை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை ஒட்டுமொத்தமாக சேர்ந்தாலே அது தூயசக்தி எனப்படும் என்றும் உங்களது ஒருமாத கால ஆட்சியில் அது எவ்வளவு தூரம் இருந்தது என எடை போடுவோமா எனவும் கேட்டுள்ளார். மதுரையைச் சார்ந்த யூடியூபர் மாரிதாஸ் இன்று எந்த ஒரு விசாரணையும் இன்றி நேரடியாக கைது செய்யப்படுகிறார். காரணம், அவர் தவெக அரசின் செயல்பாடுகளையும் அமைச்சர்களின் திறத்தையும் வெட்டவெளியில் போட்டு கேள்விகளால் துளைத்து இந்த அரசை விமர்சிக்கிறார். அவரது கேள்விகளில் அவதூறு இருந்தால் அவற்றை எதிர்கொண்டு பதில் சொல்ல வேண்டியதுதானே? அப்படியின்றி பழி வாங்கும் பாசிச மனப்பான்மையோடு அவரை கைது செய்வது அநியாயமில்லையா என்று கேட்டார்.
திருப்பரங்குன்ற தீபம் ஏற்றும் விவகாரத்தில் ‘நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடைமுறை இருந்ததோ அதையே தான் பின்பற்றுவோம்’ என முதலில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொல்கிறார். அடுத்தடுத்து பொதுத்துறை மந்திரியும், இந்து அறநிலையத்துறை மந்திரியும் அதனையே வழி மொழிகிறார்கள். சென்ற ஆட்சியினரைப் போலவே நீதிமன்ற தீர்ப்பினை அவமதித்து நாங்களும் இந்து மதவிரோதியாகவே திகழ்வோம் என சொல்வதுதான் மத நல்லிணக்கதோடு இருப்பதற்கான லட்சணமா? இதற்குப் பெயர் அநீதி எனவும் கூறினார்.

முதலில் மின்சாரத்துறையிலிருந்து ஒரு ஹார்டு டிஸ்க் காணாமல் போனதாக கண்டுபிடித்து, பத்து நாட்களுக்குப் பிறகு அத்துறையிலிருந்து ஒரு அதிகாரியை விட்டு காவல்துறையில் புகார் கொடுக்க வைத்தீர்கள்…அப்புறம் பெங்களூரில் மின்துறை ஊழியர் ஒருவரை கைது செய்து 4 ஹாட் டிஸ்க்குகளை கைப்பற்றியதாக செய்தி வந்தது, இப்போதோ 18 ஹாட் டிஸ்க்குகளை காணவில்லை என செய்தி வந்திருக்கிறது. வேறு வழியின்றி மிக மெதுவாக இன்றுதான் அந்த வழக்கினை சி.பி.சிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கிறீர்கள். இதுதான் உங்களது உண்மைத்தன்மையா என்று சாடினார்.
இதையும் படிங்க: தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!
நேர்மை உங்களிடத்தில் துளியும் இல்லை என்று கூறியுள்ள H. ராஜா, இலவச மின்சாரம், பயிர் கடன் தள்ளுபடி, உள்ளிட்டவற்றை குறிப்பிட்டார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்து இருப்பது தான் வெளிப்படைத்தன்மையா என்றும் கேட்டிருக்கிறார். தன்னை தூயசக்தி என அழைத்துக் கொள்ளும் வாய்ச்சொல் வீரர்களும் தீயசக்தி திமுகவின் நீட்சியே என்றார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு நாளிலேயே ஏகப்பட்ட கூத்து... குளறுபடி..! பொளந்தெடுத்த H. ராஜா..!!