விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ள சம்பவம், தமிழ்நாட்டின் பட்டாசு தொழிற்துறையில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் தொழிலாளர் உரிமைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி, விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டி பகுதியில் உள்ள வனஜா பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் முதலில் 18 பேர் உயிரிழந்ததாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில், பின்னர் பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து ஏற்பட்டபோது ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்ததால், சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்தன. விபத்துக்கான காரணமாக, வெடிபொருட்களை மருந்து கலக்கும் அறையில் கவனக்குறைவாக அதிக அளவில் கலந்ததும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ஒரே நேரத்தில் அதிக வெடிபொருட்களை தயாரிக்க முயற்சித்ததும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் பணியாற்றியதும் கூறப்படுகிறது.
மேலும், ஆலை ஞாயிற்றுக்கிழமை இயங்கக் கூடாது என்பது விதியாக இருந்தும், அன்று இயங்கியது என்பதும், உரிமம் புதுப்பிக்கப்படாமல் செயல்பட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலை உரிமையாளர் மற்றும் போர்மேன் தலைமறைவாக இருந்ததால், போலீசார் நான்கு சிறப்பு தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர். ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் குறித்த ஊடகச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கோரம்: 17 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு!
2026 ஏப்ரல் 24ஆம் தேதி வெளியான அதன் அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு உற்பத்தி அலகில் ஏற்பட்ட வெடி விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்ததும், ஆறு பேர் காயமடைந்ததும் குறித்து NHRC கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு விதிமுறைகள், உரிமை மீறல்கள் உள்ளிட்ட அம்சங்களை ஆணையம் ஆராய்ந்து, தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் அறிக்கை கோரியுள்ளது. இது தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: விருதுநகர் கோர சம்பவம்: மருத்துவமனையில் தொழிலாளர்கள்.. ஓடோடி சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்..!!