சென்னை: பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் முன்னணியில் உள்ள சென்னை ஐஐடி, எதிர்காலத்தில் மருத்துவக் கல்வியிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சென்னை ஐஐடியில் இனி எம்பிபிஎஸ் மற்றும் எம்டி போன்ற மருத்துவப் படிப்புகளும் அறிமுகமாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காமகோடி கூறியதாவது: எதிர்கால தலைமுறை மாணவர்கள் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரு துறைகளிலும் அறிவும் திறனும் பெற்றவர்களாக உருவாக வேண்டும் என்பதே சென்னை ஐஐடியின் நோக்கம். இதற்காக படிப்படியாக மருத்துவமனை ஒன்றை உருவாக்கி, தேவையான அனுமதிகளைப் பெற்று மருத்துவக் கல்வியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்களும் மருத்துவக் கல்வியுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார். இந்தியா உயர்தர மருத்துவ உபகரணங்களில் கணிசமான அளவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. உள்நாட்டிலேயே மருத்துவத் தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்க வேண்டுமானால், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் இணைந்து செயல்படும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 'பசு கோமியம் நிபுணர்'.. சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை விமர்சித்த பிரியங்கா.. கல்வியாளர்கள் கண்டனம்!

ஒரே நிறுவனத்தில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அறிவை ஒருங்கிணைப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் புதிய மருத்துவத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும் என ஐஐடி நிர்வாகம் கருதுகிறது.
எனினும், சென்னை ஐஐடி விரும்பியவுடன் உடனடியாக எம்பிபிஎஸ் படிப்பை தொடங்கிவிட முடியாது. இந்தியாவில் மருத்துவக் கல்வி தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளின்படி நடைபெறுகிறது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கும் எம்பிபிஎஸ் பட்டம் வழங்குவதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி அவசியம். அதேபோல், மருத்துவ மாணவர்கள் நேரடியாக நோயாளிகளிடம் பயிற்சி பெறுவதற்குத் தேவையான மருத்துவமனை மற்றும் உரிய உள்கட்டமைப்பும் இருக்க வேண்டும்.
ஐஐடி கரக்பூர் ஏற்கனவே மருத்துவமனை அமைத்து மருத்துவத் துறையில் முதுகலை எம்டி படிப்பை தொடங்குவதற்கான அனுமதியை பெற்றுள்ளது. அதே நேரத்தில், அதன் எம்பிபிஎஸ் திட்டம் இன்னும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுடன் தொடர்புடைய நிலையில் உள்ளது.
இந்த சூழலில் சென்னை ஐஐடியும் மருத்துவக் கல்வியை தொடங்குவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. திட்டம் நடைமுறைக்கு வந்தால், பொறியியல், செயற்கை நுண்ணறிவு, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை ஒரே கல்வி வளாகத்தில் இணைக்கும் புதிய முயற்சியாக இது அமையக்கூடும்.
ஆனால் மருத்துவமனை அமைத்தல், தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டங்களை சென்னை ஐஐடி கடக்க வேண்டியுள்ளது. எனவே, இது உடனடியாக தொடங்கும் மருத்துவக் கல்லூரி அல்ல; எதிர்காலத்துக்கான திட்டம் என்பதே தற்போதைய நிலவரமாகும்.
இதையும் படிங்க: "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!