இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரிக்-இ-இன்சாப் (PTI) கட்சித் தலைவருமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். சில மாதங்களாக குடும்பத்தினருக்கு சந்திப்பு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக வதந்திகள் பரவின.
இதையடுத்து அவரது 5 சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், அவரது சகோதரி உஸ்மா கானும் (Dr. Uzma Khan) சந்திக்க அனுமதி பெற்று சிறைக்குச் சென்றார். சந்திப்புக்குப் பிறகு உஸ்மா, “இம்ரான் கான் உடல் ரீதியாக நலமுடன் உள்ளார். ஆனால், தனிமைச் சிறை அடைப்பில் மன ரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது இம்ரான் கான் அளித்த அறிக்கையை PTI கட்சி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: “பாகிஸ்தான் ராணுவம் எனக்கு எதிராக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டது. அவர்களுக்கு இப்போது என்னைக் கொலை செய்வதே பாக்கி. என் உயிருக்கு ஆபத்து உள்ளது. மரணத் தண்டனை விதிக்கப்பட்ட கைதியைப் போல் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏதாவது நடந்தால், ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீர் மற்றும் உளவுத்துறை (ISI) டி.ஜி. ஆசிம் மலிக் பொறுப்பாவார்கள்.”
இதையும் படிங்க: இம்ரான் கானுக்கு என்னாச்சு? சந்திக்க அனுமதி மறுப்பு! உயிரோடவாச்சும் வச்சிருக்கீங்களா? ஆதரவாளர்கள் சந்தேகம்!

தொடர்ந்து, “நான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகிறேன். 5 நாட்கள் என் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் நான் அறையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமானமற்றவை. ராணுவத் தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர். எனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசிம் முனீர் தான் காரணம்” என்று இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
PTI கட்சி தெரிவிப்பது: இம்ரான் கானுக்கு மின்சாரம், சூரிய ஒளி, உணவு, உதவி, சுத்தமான குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது சர்வதேச சட்டங்களுக்கு மீறல். சகோதரி உஸ்மா கானும், “இம்ரான் ரொம்ப கோபமாக இருக்கிறார். அவரை தனிமையில் வைத்து மனத் துன்புறுத்தல் அளிக்கிறார்கள். இது உடல் வலியை விட மோசமானது” என்று கூறினார்.
அவரது மற்றொரு சகோதரி அலீமா கானும் (Aleema Khan), அசிம் முனீரை ‘ராடிக்கல் இஸ்லாமிஸ்ட்’ என்று விமர்சித்துள்ளார். “அவர் இந்தியாவுடன் போர் விரும்புபவர். இஸ்லாமிய தீவிரவாதத்தால் அவர் இன்னும் கொடுமையானவர்” என்று அலீமா சூட் நியூஸ் நேர்காணலில் கூறினார். அலீமா, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகளுக்கு எதிராக contempt petition தாக்கல் செய்திருந்தார்.
இம்ரான் கான் 2023 ஆகஸ்ட் முதல் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிறையில் உள்ளார். அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினர், “இது அரசியல் சதி” என்று கூறி போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சிறைத்துறை, “இம்ரான் கான் நலமுடன் உள்ளார்” என்று மறுத்தாலும், சர்வதேச அமைப்புகள் இந்தச் சம்பவத்தை கவனித்து வருகின்றன. இம்ரான் விடுதலைக்கான போராட்டம் பாகிஸ்தான் அரசியலில் புதிய அலை தூண்டலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அரஸ்ட் பண்ணி 845 நாளாச்சு!! ஜெயில்ல வச்சி எங்கப்பாவை கொன்னுட்டாங்க! கதறும் இம்ரான்கான் மகன்!