மதுரை சோனையார் கோவில் அருகே அச்சகம் நடத்தி வருபவர் முத்துச்சாமி. கடந்த 7 வருடங்களாக அச்சகம் நடத்தி வரும் இவர், நடிகர் சூரியின் தம்பி மீது ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வாராந்திர குறைதீர்ப்பு மனு நாள் கூட்டத்தில் இந்த புகார் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். அந்த மனுவில், தான் நடத்தி வரும் அலைகள் அச்சகம் கடைக்கு கீழே நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் என்பவர் நடத்தி வரும் அம்மன் உணவகம் தற்போது செயல்பட்டு வருகிறது.

மேலும், இருவருக்குமான பொது பாதையை லட்சுமணன் ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் உணவாக வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்கிறார். மேலும், அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகிறது. பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமலும், அதோடு அவசர உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தனது கடைக்குள் அனுமதியில்லாமல் அத்துமீறி உள்ளே நுழைந்து பூட்டை உடைத்து, சேமிப்பு பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரை செல்லும் விஜய்... பூத் கமிட்டி மாநாடா? சித்திரை திருவிழாவுக்கா? வெளியானது முக்கிய அப்டேட்!!

மேலும், மாடிக்கு செல்லும் பாதைக்கு பூட்டு போட்டு விட்டதாகவும், வீட்டு உரிமையாளரிடம் கூடுதல் பணம் தருகிறேன் என்று கூறி மாடியில் இருப்பவரை காலி செய்து தன்னிடம் கொடுங்கள் என வீட்டு ஓனருக்கும் தனக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி அராஜக செயலில் ஈடுபடுகிறார் என்றும் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முத்துச்ச்சாமி, நடிகர் சூரிக்கு தெரிந்துதான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதா? அல்லது அவரது பெயரை கெடுப்பதற்காக அவரது தம்பிகள் இது போன்ற தவறுகள் செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. நடிகர் சூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது வேதனை அளிக்கிறது. அவர்கள் தொழில் நடத்துவது குறித்து நான் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது போன்ற அராஜக செயலில் ஈடுபடும் அவரது சகோதரர் லட்சுமணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். உயிருக்கு பயந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…விழாக் கோலம் பூண்டது தூங்கா நகரம்