தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு சிறப்பு மையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இருவாச்சி பறவைகளைப் பாதுகாக்கும் முன்னோடித் திட்டமாக இது அமைகிறது.

இத்திட்டத்திற்கு அழிந்து வரும் உயிரின பாதுகாப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.10 லட்சம் திட்ட அறிக்கை தயாரிப்பு, ரூ.59.4 லட்சம் மையம் அமைப்பு, ரூ.12.6 லட்சம் வாழ்விட மதிப்பீடு, மற்றும் ரூ.6 லட்சம் தனியார் நில உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும்.
இதையும் படிங்க: பச்சைத் துரோகம் செய்யும் தமிழக அரசு.. மா விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் அன்புமணி..!
ஆனைமலை புலிகள் காப்பகம், 60 அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த மையம் இருவாச்சி பறவைகளின் வாழிடப் பாதுகாப்பு, இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும். இதன் மூலம், தமிழ்நாடு இருவாச்சி பறவைகள் பாதுகாப்பை நிறுவனமயமாக்கிய முதல் மாநிலமாக விளங்குகிறது.
இதற்கு முன், கடற்பசு பாதுகாப்பு சரணாலயம், நீலகிரி வரையாடு திட்டம், தேவாங்கு பாதுகாப்பு மையம் மற்றும் மதுக்கரை யானைகள் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு நிறுவியுள்ளது. இருவாச்சி பறவைகள், ஒரே துணையுடன் வாழும் தனித்துவமான பண்பு மற்றும் சோலைக்காடுகளின் பாதுகாவலர்களாக விளங்குவதால், இயற்கையின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. இத்திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," ஆசிய வெப்பமண்டலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கவர்ச்சிகரமான பறவைகளில் ஒன்றான இருவாச்சி பறவையினை பாதுகாப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் (ATR) இருவாச்சி பறவைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

இப்புதிய முன்னெடுப்பின் மூலம் இந்தியாவில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பில் தமிழ் நாடு முன்னணியில் உள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வெப்பமண்டல வன சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் ஒரு பெரிய முன்னேற்றமாகும்.
இருவாச்சி பறவைகள் வெப்பமண்டல காடுகளில் விதைகளைப் பரப்பி, மரங்களில் மீளுருவாக்கத்திற்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. இருப்பினும், வாழ்விடச் சீரழிவு, காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த பறவை இனங்கள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இப்பறவைகளின் பாதுகாப்பிற்கான அவசரத்தை உணர்ந்து, அறிவியல் ஆராய்ச்சி, வாழ்விட மறுசீரமைப்பு, சமூக ஈடுபாடு மற்றும் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ள தமிழ் நாடு ஒரு பிரத்யேக மையத்தை நிறுவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தரையிறங்கும் போது வெடித்த விமான டயர்கள்.. சேதமடைந்த என்ஜின்.. ரன்-வேயில் வழுக்கிய விமானம்!!