ரயில்வே முன்பதிவு கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் பெறும் நடைமுறையில் முக்கிய மாற்றத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் புதிய டோக்கன் முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடைசி நேரத்தில் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தட்கல் டிக்கெட் பெறும் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், வரிசை முறையை ஒழுங்குபடுத்தவும் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய முறை முதற்கட்டமாக மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், பின்னர் இந்தியாவின் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மேற்காசிய போர் முதல் ஹைட்ரஜன் ரயில் வரை... "இந்தியா சவால்களை சமாளிக்கிறது" என மோடி பெருமிதம்!
புதிய நடைமுறையின்படி, தட்கல் முன்பதிவு தொடங்குவதற்கு முன்பே பயணிகளுக்கு டோக்கன் வழங்கப்படும். இதன் மூலம் யார் எந்த வரிசையில் டிக்கெட் பெறுவார்கள் என்பது முன்கூட்டியே உறுதி செய்யப்படும். இதனால் தேவையற்ற தள்ளுமுள்ளு, குழப்பம் மற்றும் நீண்ட நேர காத்திருப்பு குறையும் என ரயில்வே நம்புகிறது.

ஏசி வகுப்புக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில், அதற்கான டோக்கன்கள் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை வழங்கப்படும். அதேபோல், ஏசி அல்லாத வகுப்புக்கான தட்கல் முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்கும் நிலையில், அதற்கான டோக்கன்கள் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை வழங்கப்பட உள்ளன.
தொடக்க கட்டத்தில், ஒவ்வொரு முன்பதிவு கவுன்டரிலும் ஏசி தட்கல் டிக்கெட்டுக்காக 10 டோக்கன்களும், ஏசி அல்லாத தட்கல் டிக்கெட்டுக்காக 15 டோக்கன்களும் மட்டுமே வழங்கப்படும். பின்னர் பயணிகள் வருகை மற்றும் தேவைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தட்கல் டிக்கெட் பெறும் நடைமுறையை மேலும் வெளிப்படையாகவும் ஒழுங்காகவும் மாற்றும் நோக்கில் இந்த புதிய டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றம் நாடு முழுவதும் அமலுக்கு வருமா என்பது, சோதனை திட்டத்தின் வெற்றியைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை! கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி! பிரமாண்டம்!