இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாளை நவம்பர் 2ஆம் தேதி மாலை 5:26 மணிக்கு மற்றொரு மைல்கல்லை எட்ட உள்ளது. சந்திரயான்-3 ஐ வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பிய அதே LVM3-M5 ராக்கெட், இப்போது 4,410 கிலோ எடை கொண்ட CMS-03 என்ற மல்டி-பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த தயாராக உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்த பயணம் தொடங்குகிறது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்கி நாளை மாலை வரை நடைபெறும்.
இந்த திட்டத்தின் வெற்றிக்காக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இது இஸ்ரோவின் ஒவ்வொரு முக்கிய ஏவுதளத்திற்கு முன்னரும் பின்பற்றப்படும் பாரம்பரியமாகும்.
இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... “தமிழ் என்றால் கசக்குதா? தமிழன் என்றால் எரியுதா?”... பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள்...!

நிருபர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், “நாளை மாலை 5:26 மணிக்கு LVM3-M5 ராக்கெட் மூலம் CMS-03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளோம். இது ஒரு முக்கியமான தகவல் தொடர்பு செயற்கைக்கோள். நாட்டின் தொலைத்தொடர்பு துறையை வலுப்படுத்தும். ஸ்ரீஹரிகோட்டாவில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன,” என்று தெரிவித்தார்.
LVM3-M5 ராக்கெட் மொத்தம் 642 டன் எடை கொண்டது. இது PSLV மற்றும் GSLV ராக்கெட்டுகளை விட அதிக எடை சுமக்கும் திறன் கொண்டது. செயற்கைக்கோள் புறப்பட்ட 16வது நிமிடத்தில், பூமியில் இருந்து 179 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு, இணைய இணைப்பு, தொலைதூர பகுதிகளுக்கு தகவல் தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்தும்.
இஸ்ரோவின் இந்த முயற்சி, நாட்டின் விண்வெளி தொழில்நுட்பத்தில் மற்றொரு பொற்காலத்தை உருவாக்கும். உலகமே கவனிக்கும் இந்த நிகழ்வு, இந்தியாவின் விஞ்ஞான பெருமையை மேலும் உயர்த்தும்.
இதையும் படிங்க: என்னது மலை முட்டை போடுதா..!! இயற்கையின் அற்புத ரகசியம்..!! வியக்கும் ஆராய்ச்சியாளர்கள்..!!