நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் விஜய்யின் கடைசி திரைப்படமாகக் கருதப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (சிபிஎஃப்சி) சான்றிதழ் வழங்குவதில் தாமதம் செய்ததால், படத்தின் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் படக்குழுவுக்கு வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அதேநேரம், பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். படம் டிசம்பர் 18, 2025 அன்று தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆய்வுக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என பரிந்துரைத்தாலும், சில உறுப்பினர்களின் ஆட்சேபனை காரணமாக மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதனால், ஜனவரி 9, 2026 அன்று திட்டமிடப்பட்ட வெளியீடு சாத்தியமாகவில்லை. படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. தனி நீதிபதி யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

ஆனால், சிபிஎஃப்சி மேல்முறையீடு செய்ததால், தலைமை நீதிபதி அமர்வு அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தியது. இப்போது வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது.இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி மிகவும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், கரூர் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு, "சென்சார் போர்டு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது" என்று குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: கூட்டணிக்கு நடுவில் கூடலூருக்கு வருகை தரும் ராகுல்! மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம்!
இதனிடையே, ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் விவகாரத்தில் மக்களவை காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைத் தடுக்கும் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஒரு தாக்குதலாகும் என கூறினார். தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் பிரதமர் மோடியின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை பெயர் மாற்றத்துக்கு மோடியின் வெறுப்பே காரணம் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு