திருப்பரங்குன்றம் தீர்ப்பை முன்னிட்டு வீடுகளில் விளக்கேற்றச் சொல்லும் பாஜக-வினர், முதலில் ஏழை மக்களின் பசியைப் போக்க அவர்களது வீடுகளில் அடுப்பு எரிய வழிவகை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று கோவை வந்தடைந்த சீமான், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பாஜக-வின் விளக்கேற்றும் அழைப்பு குறித்த கேள்விக்கு, “நாட்டில் பல கோடி மக்கள் பசியோடு இருக்கிறார்கள்; முதலில் அவர்கள் வயிற்றில் விளக்கேற்றுங்கள், பிறகு வீடு வீடாக விளக்கேற்றலாம்” எனத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார். மேலும், வீடுகள் எல்லாம் இப்போது இருட்டிலா இருக்கிறது? என அவர் கேள்வி எழுப்பினார்.
கோவை, ஜனவரி 6: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் நிலவும் தாமதம் குறித்தும் சீமான் தனது கருத்தைப் பதிவு செய்தார். “ஏதோ ஒரு சான்றிதழை வழங்கிவிடலாம்; அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பை நான் பார்த்தேன், அதில் நெருக்கடி தரும் அளவிற்கு அப்படி ஒன்றும் பெரிய விவகாரங்கள் இல்லை” எனத் தெரிவித்தார். எனவே, தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: "தியேட்டர்ல தெறிக்கப்போகுது!" ஜனநாயகன் vs பராசக்தி -ஆன்லைனில் டிக்கெட் பிடிக்க போட்டி!
தொடர்ந்து, “தமிழ் என்பது சீமானுக்கு அரசியல் பிழைப்பு” என்று சுப. வீரபாண்டியன் விமர்சித்தது குறித்த கேள்விக்கு, “உயிரோடு இருப்பவர்களின் கருத்துகளுக்கு மட்டும் பதில் அளிக்கலாம்” எனச் சீமான் அதிரடியாகக் கூறினார். அப்போது, “சுப. வீரபாண்டியன் உயிரோடு இல்லையா?” எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர் போய் பல நாள் ஆகிவிட்டது” என எகத்தாளமாகப் பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். சீமானின் இந்த விமர்சனம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு! தடுமாறி விழுந்த விஜய் - கட்டுக்கடங்காத கூட்டத்தால் பரபரப்பு!