காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் ஊராட்சி கரியன் கேட் அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெய் சுரேஷ். இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுதி காப்பாளராக அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி அஸ்வினி. 29 வயதாகும் இவருக்கு ஜெய் சுரேஷுடன் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும் இரண்டு வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.
பணியிடத்தில் தங்கி வேலை பார்த்து வரும் ஜெய் சுரேஷ் அவ போது வீட்டிற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அஸ்வினி வீட்டில் தனியாக இருந்தபோது, கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவான இளைஞர்.. பாதியில் நிற்கும் விசாரணை..!
இச்சம்பவம் பட்டப்பகலில் நடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஸ்வினி, தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதலின்போது, 8 சவரன் நகை மற்றும் 75,000 ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

தாக்குதலால் படுகாயமடைந்த அஸ்வினி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் வசித்து வரும் வீட்டின் அருகில் மதுபான கடை இருப்பதாகவும் மது போதையில் இவ்வாறு செய்தார்களா என்று கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் குற்றம் நிகழ்ந்து ஐந்து நாட்களாகிய நிலையில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
ஐந்து நாட்களாக குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாததை கண்டித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அப்போது காவல் நிலையத்தில் குற்றவாளிகளை ஏன் இன்னும் கைது பண்ணல... வயிறு பத்தி எரியுதுடா என அஸ்வினியின் சகோதரன் கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது.
இதையும் படிங்க: 6 மாதத்திற்கு முன்பே நடந்த நிஜ 'ஜெய்பீம்' சம்பவம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!