பெங்களூருவில் அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை கடுமையாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக ஒருவழிப்பாதையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் கடப்பது, நடைபாதையில் வாகனம் ஓட்டுவது, நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தற்போது சில விதிமீறல்களுக்கு ரூ.500 அளவில் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகை குறைவாக இருப்பதால், சில வாகன ஓட்டிகள் அபராதத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விதிகளை மீறுவதாக அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் அபராதத்தை பல மடங்கு உயர்த்தினால், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதை ஊக்குவிக்க முடியும் என அரசு ஆலோசித்து வருகிறது.
இதன்படி, ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் வாகனம் ஓட்டுவது, சிக்னலை மீறுவது உள்ளிட்ட முக்கிய விதிமீறல்களுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. குறிப்பாக மீண்டும் மீண்டும் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அதிக அபராதம் விதிக்கும் முறையை கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: காவிரி நீர் விவகாரம்: கர்நாடகத்தின் அணுகுமுறை ஏற்க முடியாது! மாணிக்கம் தாகூர் விமர்சனம்!

இதனுடன், தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்படுகின்றன. விதிமீறல்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் ஓட்டுநர் உரிமத்தில் நடவடிக்கை எடுக்கும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும், நடைபாதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது, அதிக சத்தம் எழுப்பும் ஹாரன் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பயன்படுத்துவது போன்ற விதிமீறல்களுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களின் முந்தைய பதிவுகளை எளிதாக கண்காணிக்கும் வகையில் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையின் மின்னணு அமைப்புகளை ஒருங்கிணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காவிரியில் உரிய நீரை திறக்க உத்தரவிடுக! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு!