தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்டு சபாநாயகர் பிறப்பித்த அதிகாரப்பூர்வ உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக தலைமைக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வழக்கறிஞர் எம்.எல். ரவி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை (அக்டோபர் 9, வெள்ளிக்கிழமை) தனது இறுதித் தீர்ப்பை வழங்குகிறது.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறி வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்தனர். அவர்கள் பதவி விலகல் கடிதம் அளித்த சில நிமிடங்களிலேயே, அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அறிவித்தார்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் அமர்வில் விரிவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!
விசாரணையின் போது அதிமுக கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், "அரசியல் சாசன விதிகளின்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகும்போது, அவர் எவ்வித மிரட்டலும் அழுத்தமும் இன்றி சுயமாகவும் தன்னிச்சையாகவும் பதவி விலகினாரா என்பதை உறுதி செய்ய சபாநாயகர் முறையான விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், கடிதம் கொடுத்த சில நிமிடங்களிலேயே எந்தவித விசாரணையும் இன்றி அவசர அவசரமாக ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் குதிரை பேரம் நடந்துள்ளது. எனவே, சபாநாயகரின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது, இதனை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டனர்.
மறுபுறம் சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், "ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பினால், அவரைத் தொடர்ந்து அப்பதவியில் நீடிக்குமாறு யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் சுய விருப்பத்தை உறுதி செய்து சட்ட விதிகளுக்கு உட்பட்டே சபாநாயகர் முடிவெடுத்துள்ளார்; சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் எடுக்கப்பட்ட இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது" என வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு காரசார வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள சூழலில், உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!