யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 1995-1996ஆம் ஆண்டுகளில் இலங்கை அரச படைகளால் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தில், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகவும், அவர்கள் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டதாகவும் 1998இல் இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச குற்றம்சாட்டினார்.

இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் 1999இல் நடந்த பன்னாட்டு கண்காணிப்பு அகழ்வில் 15 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டன, இவற்றில் இரண்டு 1996இல் காணாமல் போனவர்களுடையவை என அடையாளம் காணப்பட்டன. தற்போது, இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஜூன் 26 முதல் 45 நாட்களுக்கு நீதிமன்ற உத்தரவுடன் முன்னெடுக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: UK சென்ற பிரதமர் மோடி.. இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!
இந்நிலையில் இலங்கையின் செம்மணி - சித்துபாத்தி பகுதியில் மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 82 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புத்தகப் பையுடன் அடையாளம் காணப்பட்ட குழந்தை ஒன்றின் எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்ட இடத்திலிருந்து சிறிய காலணி மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருவது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

இதுதொடர்பாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இலங்கை அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், பிரபல நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழதேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள் காலத்தின் கறையான் அரித்து எலும்புக் கூடுகளாய் மாறி ஈழத்தில் நிகழ்ந்து இனப்படுகொலைதான் என்பதை அடையாளம் காட்டுகிறது. செம்மணி மனிதப் புதைகுழியானது தமிழினப் படுகொலையின் சாட்சியாகும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தென்னிந்திய பிரபல நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை..!!