கரூர் கோரச் சம்பவம் மனதில் நீங்காத வடுவாக மாறியது. வரலாற்றுப் பெரும் கொடுமையாக உருவெடுத்துள்ளது. விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கரூர் சம்பவம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த துயர நிகழ்வு பற்றித் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையே காங்கிரஸ் கட்சியின் கருத்து மற்றும் அதுவே என்னுடைய கருத்து என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆமை புகுந்த வீடும்... பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது! விளாசிய ப. சிதம்பரம்

ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று தனக்குத் தோன்றுகிறது என தெரிவித்தார். தனக்கு ஒரு யோசனை தோன்றியது என்றும் அந்த யோசனையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன் எனவும் கூறினார். அது யோசனைதான்., இது போன்று பலர் ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவித்திருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என கூறியுள்ள பா. சிதம்பரம், அந்த முடிவுகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் பொது வெளி நிகழ்ச்சிகள் நடத்துபவர்களும் கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கரூர் நிகழ்வைப் போன்று துயர சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க எல்லோரும் கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: உள்ளூர் அரசியல்வாதிகள் தொடர்பு இருக்கு… சிபிஐ க்கு மாத்துங்க… தவெக பகீர் குற்றச்சாட்டு