கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், இந்த சம்பவத்தால் கட்சி நிர்வாகிகள் மீது விழுந்திருக்கும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், விஜய் தன்னையும், கட்சியினரையும் கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் திட்டத்தை வகுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 27 அன்று, கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில், மோசமான திட்டமிடல் மற்றும் கூட்ட நிர்வாகக் குறைபாடுகளால் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தவெகவின் மோசமான ஏற்பாடுகளே காரணம் என தமிழக அரசு குற்றம்சாட்ட, போலீஸ் பாதுகாப்பு குறைபாடே இதற்கு மூல காரணம் என தவெக பதிலடி கொடுத்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றம், விஜயின் தலைமைப் பண்பு குறித்து கடுமையாக விமர்சித்து, சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.
இதையும் படிங்க: விஜயை கைது செய்ய வேணாம்!! மு.க.ஸ்டாலினிடம் ராகுல்காந்தி கோரிக்கை?! தேசிய கட்சிகள் தலையீடு!
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் வி.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. அவதூறு பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, ‘ஜென் Z போராட்டம் வெடிக்கும்’ என சர்ச்சைக்குரிய பதிவு செய்து நீக்கியதற்காக தேடப்படுகிறார். அவர் தனி விமானத்தில் டெல்லி சென்று, பின்னர் உத்தரகாண்ட் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தேடப்படுகின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் இவர்களின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 6) விசாரணை நடைபெறுகிறது.
விஜய் மீது நேரடி வழக்கு பதிவு செய்யப்படாதது, அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கரூர் சம்பவத்தால் தவெகவின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாக உணரும் விஜய், மூத்த நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தவெகவின் மதுரை மாநாடு மற்றும் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் அலைமோதியது, திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தவெக தலைவர்கள் கூறுகின்றனர். இதனால், கரூர் சம்பவத்தை திமுக அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோருக்கு முன்ஜாமீன் கிடைக்காவிட்டால், விஜய் தன்னையும், கட்சியினரையும் கைது செய்யக் கோரி, டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளார். “சிறை சென்று திரும்பினால், அரசியல் பலம் கூடும்; அதன்பின் 2026 தேர்தல் வேலைகளை நிம்மதியாக செய்யலாம்” என விஜய் முடிவு செய்துள்ளதாக தவெக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
தவெக, சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. விஜயின் மாநில சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, தவெகவின் எதிர்காலத்தையும், தமிழக அரசியல் களத்தையும் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயிலா? ஜாமினா? தவிக்கும் தவெக நிர்வாகிகள்! சுப்ரீம் கோர்ட்டில் இன்று ரிசல்ட்?!