கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில் நிலங்கள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை பிறப்பித்துள்ள புதிய உத்தரவு அரசியல் மற்றும் மத அமைப்புகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 3,085 ஏக்கர் நிலங்களின் பத்திரப்பதிவு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அறநிலையத் துறை ஆணையர் வினய், திருப்பூர் இணை ஆணையருக்கு அனுப்பியுள்ள உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணியர், கல்யாண பசுபதீஸ்வரர், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் மற்றும் வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவில்களுக்கு சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக முன்பு பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலங்கள் ஆரம்பத்தில் கோவில் பெயரில் இருந்ததாகவும், பின்னர் தனிநபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அறநிலையத் துறை அதிகாரிகளால் தவறுதலாக இந்த நிலங்களுக்கு பத்திரப்பதிவு தடை விதிக்கப்பட்டதாகவும், தற்போது வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில் அந்தத் தடையை நீக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் 3,390 பட்டாதாரர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சினிமா கிளைமேக்ஸ் போல கத்தி பேசுறாரு..! முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்..!

இந்த உத்தரவை தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக மாற்றும் நடவடிக்கையாக இதை குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே கோவில் சொத்துக்களை பாதுகாக்காமல், அவற்றை கைமாறச் செய்யும் முயற்சி நடைபெறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆலய வழிபடுவோர் சங்க நிறுவனர் டி.ஆர். ரமேஷ், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் ஆதிசேஷன் மற்றும் ஹிந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிகுமார் ஆகியோரும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய அறநிலையத் துறையே அவை கைமாறும் சூழலை உருவாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அல்லது இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் விரிவான அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. இந்த உத்தரவு தொடர்பான விவாதம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!