நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் சரவணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் தங்கள் மீதான சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்துள்ளனர்.
கவின் கொலை சம்பவம் 2025 ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கவின், காதல் விவகாரம் தொடர்பாக சுர்ஜித் என்பவரால் கொலை செய்யப்பட்டார். சுர்ஜித்தின் தந்தையான தமிழ்நாடு சிறப்பு காவல்படை உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் இந்தக் கொலையில் தொடர்புடையவர்களாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டனர். சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சுர்ஜித் குண்டர் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிசிஐடி விசாரணைக்குப் பிறகு 2025 அக்டோபர் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 83 சாட்சிகளின் விசாரணை அடிப்படையில் சரவணன், ஜெயபால் உள்ளிட்டோர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, வழக்கு பலவீனமானது என்று கூறி சரவணனும் ஜெயபாலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நெல்லை கவின் கொலை..! சிசிடிவி சமர்ப்பிக்க ஆணை..! மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு..!.
இந்த நிலையில், சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கவின் ஆணவ படுகொலை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட கைது பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி மேல் முறையீடு செய்திருந்தார். நீங்கள் ஏன் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யக்கூடாது என்றும் எதற்காக பிடிவாரண்டை ரத்து செய்யக் கூறுகிறீர்கள் என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பல்வேறு கேள்விகளை முன்வைத்த உச்ச நீதிமன்றம், கிருஷ்ணகுமாரியின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையும் படிங்க: நெல்லை கவின் கொலை..! சிசிடிவி சமர்ப்பிக்க ஆணை..! மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு..!.