தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் பல ஆண்டுகளாக சமூகத்தில் பெரும் பிரச்சனையாக உள்ளன. இவை பெரும்பாலும் சாதி, மதம், குடும்ப மானம் போன்றவற்றை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் வன்முறை. இந்தப் பின்னணியில், கவின் என்ற இளைஞரின் ஆணவப் படுகொலை விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது, தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது.
சிகிச்சை முடிந்து, சொந்த ஊருக்குச் செல்வதற்காக இருவரும் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த இளைஞர் அரிவாளை எடுத்து கவின்குமாரை வெட்ட துணிந்துள்ளார். அவரிடம் இருந்து தப்ப முயன்ற கவின், உயிரை கையில் பிடித்து ஓடியுள்ளார். இருப்பினும் கவினை அந்த இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: சிறுத்தை எங்கயுமே சிறுத்தை தான்! பிரதமர் நிகழ்ச்சியில் திருமா.. வன்னியரசு விளக்கம்..!

இதை அடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது சுர்ஜித் என்ற இளைஞர் கவின்குமாரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. தன் சகோதரி உடன் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாகவும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு செய்ததாகவும் அந்த இளைஞர் சுர்ஜித் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சாதி ஆணவ படுகொலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கொடூர ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த சுபாசினியின் பெற்றோர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறையில் பணியாற்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அவர்களை காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் மேலும் அவர்கள் காவல்துறையில் பணியாற்றுவதால் இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிக்க சாதி வெறிக் கொலைகள், சாதிவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்த திருமா, ஆதிக்க சாதிவெறியாட்டத்தைத் தடுப்பதற்கு காவல்துறையில் ஒரு தனி நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் மீண்டும் முன்வைப்பதாக சுட்டிக்காட்டினார்.
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட திருமாவளவன், கவின் செல்வகணேஷை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அதிமுகவை அக்கு, அக்கா பிரிச்சி போட்டுடுவாங்க... எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த திருமா...!