கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் ரூ.14.25 லட்சம் சிக்கியது: பெண் தலைவி உள்ளிட்டோர் மீது வழக்கு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.14.25 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
குன்றத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கெருகம்பாக்கம், சென்னை புறநகர் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்கு தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் அதிகரித்து வரும் நிலையில், கட்டட அனுமதி மற்றும் மனைப்பிரிவு ஒப்புதல் வழங்குவதில் லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சூடு பிடிக்கிறது டாஸ்மாக் முறைகேடு வழக்கு! ஐஏஎஸ் அதிகாரி விசாகனை நெருங்கும் போலீஸ்! விசாரணை தீவிரம்!
இதையடுத்து, ஆலந்துார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆகஸ்ட் 11-ம் தேதி இரவு கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி, துணைத் தலைவர் லைலா, ஊராட்சி செயலர் தணிகாசலம் மற்றும் சில வார்டு உறுப்பினர்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.14.25 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பணம் குறித்து ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், பணம் தனது மேஜைக்கு எப்படி வந்தது என்பது தெரியாது என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், அங்கிருந்த விஜிஎன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் திருமண செலவுக்காக பணத்தை கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். பதில்களில் முரண்பாடு இருந்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பணம் லஞ்சத்தொகையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அதை பறிமுதல் செய்தனர்.
இதுதவிர, ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரியிடம் இருந்த ரூ.32,200 பணத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த பணம் தொடர்பாக அவர் அளித்த விளக்கமும் திருப்திகரமாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மனைப்பிரிவு ஒப்புதலுக்காக ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ஊராட்சி தலைவர் உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் உண்மையில் லஞ்சத்தொகையா, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் கட்டுமான நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், ஊராட்சி அலுவலகத்தில் ஒரே சோதனையில் ரூ.14.25 லட்சம் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Breaking News! செந்தில் பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டில் அதிர்ச்சி... டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடி!