திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற அரசியல் உள்நோக்கத்தோடு, பல ஆண்டு காலத்திற்கு முந்தைய வங்கி வழக்கு ஒன்றினை தூசு தட்டி எடுத்து, அதனை ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில் தோற்றுப் போன ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள மேலும் ஒரு முயற்சி தான், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணி நியமனம் குறித்த விவகாரம் என அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
2011ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையுள்ள பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போதிய நியமனங்கள் செய்யப்படாமல், காலிப் பணியிடங்கள் அதிகமாகி நிர்வாகத்தை மேற்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் இருந்த நிலையில், 2019 பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப வேண்டும் என்பதற்காக வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற முறையில் நிரப்புவதற்காக, தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்கென தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு, அந்த இணையதளம் மூலமாக, 2 இலட்சத்து 499 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு இணையவழியில் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக, 38 மாவட்டங்களில் உள்ள 591 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இந்த எழுத்துத் தேர்வுகள் அனைத்தும், அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக மதிப்பீடு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வு முடிவுகளும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். நியாயமான முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால், இந்தத் தேர்வில் கலந்து கொண்ட இலட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஒரு ஆட்சேபணை கூட பெறப்படவில்லை என்றும் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியாணைகள் முதலமைச்சர் ஸ்டாலினால் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்... சிபிஐ விசாரணை கோரும் நயினார்...!
இத்தகைய ஒரு வரலாற்றுச் சாதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் நிகழ்த்தப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், இதற்குக் களங்கம் கற்பிக்கும் வகையில், அமலாக்கத் துறை மூலமாக ஒன்றிய அரசு இத்தகைய அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்றும் இவ்வாறு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது என்றும் கூறினார். அரசியல் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவற்றை முறியடிக்கத் தேவையான அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பணம் இருந்தால் தான் அரசு பதவியா? நகராட்சி நிர்வாகத்துறை ஊழலுக்கு தவெக கண்டனம்...!