கோவை மத்திய சிறை வளாகத்தில் கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் சிறை மற்றும் தேனி மாவட்டச் சிறையில் கைதிகள் தப்பி ஓடிய நிகழ்வுகளின் பரபரப்பு அடங்கும் முன்பே கோவையில் இன்னொரு சம்பவம் நடந்திருப்பது பாதுகாப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த ராகவன் என்ற இருபத்தைந்து வயது இளைஞன் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்திலும் இவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. அன்னூர் காவல் நிலையத்தாரால் கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுவதற்காக அழைத்து வரப்பட்டார்.சிறைக்குள் அனுமதிக்கும் நடைமுறையின் போதுதான் சம்பவம் நிகழ்ந்தது. கோவை மத்திய சிறையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு அமைப்பு உள்ளது. முதல் நுழைவு வாயிலிலிருந்து இரண்டாவது நுழைவு வாயிலுக்கு ராகவனை அழைத்துச் செல்லும்போது, அவரது கைகளில் போடப்பட்டிருந்த விலங்குகளைக் காவலர்கள் அகற்றினர்.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ராகவன் திடீரென ஓட்டம் பிடித்தார். சிறை வளாகத்திற்குள்ளேயே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அவர் தப்பிச் சென்றது அதிகாரிகளையே அதிர்ச்சியடையச் செய்தது.இந்தச் சம்பவம் இவருக்கு முதல் முறையல்ல. அதற்கு முந்தைய நாள் மாலையே அன்னூர் காவல் நிலையக் காவலில் இருந்து ஒருமுறை தப்பி ஓடியிருந்தார். அப்போது போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து மீண்டும் கைது செய்தனர். ஆனால் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் மீண்டும் ஒருமுறை காவல்துறையின் பிடியிலிருந்து தப்பிவிட்டார்.
இதையும் படிங்க: இந்தியில் பெயர்ப்பலகை... 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்... கொதித்துப்போன எதிர்க்கட்சிகள்... அதிரடி காட்டிய தமிழக அரசு..!!
இதனால் பந்தயச்சாலை காவல் நிலையத்தினர் தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தச் சம்பவத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நான்கு காவலர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைதியைப் பாதுகாப்பாக அழைத்து வந்த மற்றும் சிறை வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அகிலனுக்கு என்ன நடந்தது..? வேகமெடுக்கும் தற்கொலை விவகாரம்..! சிபிசிஐடிக்கு மாற்றம்..!!