கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் பயின்று வந்த பட்டியலின மாணவர் அகிலன் தற்கொலை செய்துகொண்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதான அகிலன் அக்டோபர் 21ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது தாய் கௌசல்யா தேவி அளித்த புகாரில், பள்ளியில் சாதிய அடிப்படையிலான துன்புறுத்தலும் அவமதிப்பும் இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
புகாரின்படி, வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மாணவர்களிடம் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அதைத் தொடர்ந்து சக மாணவர்கள் இருவர் அகிலனை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் அருண்குமார் இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து பீளமேடு காவல்துறை தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் இரு மாணவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது.வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்தது. மாணவரின் குடும்பத்தினரும் பல்வேறு அமைப்பினரும் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி, தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும் நடுநிலையான விசாரணை நடத்தவும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: சாதிய ஒடுக்குமுறை..! மாணவன் தற்கொலை.! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்.!!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் கோவை மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதற்கிடையே கோவை மாநகர காவல்துறை இந்த வழக்கை விரிவாக விசாரிக்க ஐந்து சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது. அறிவியல் சான்றுகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றைச் சேகரித்து விசாரணை நடைபெற்று வருகிறது.மாணவர் அகிலனின் மரணம் தொடர்பான இந்த வழக்கு இப்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெரியார் அறிவுலகம் திறப்பு..! கோவையில் முதல்வர் விஜய்..! வரவேற்பில் அதிரவிட்ட மக்கள்..!!