தமிழ்நாட்டின் கோவை நகரில், கல்லூரி மாணவி மீது நடத்தப்பட்ட கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்திற்கு பொறுப்பான 3 பேரையும் போலீசார் நள்ளிரவில் சுட்டு கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 19 வயது மாணவி சிகிச்சையில் உள்ளதாகவும், அவரது ஆண் நண்பர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (நவம்பர் 2) இரவு சுமார் 11 மணியளவில், மதுரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது போதையில் இருந்த குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்தி காளிஸ்வரன் ஆகிய 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர். ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி மயக்கடித்து, மாணவியை கத்தியால் மிரட்டி தூக்கி சென்றனர்.
இதையும் படிங்க: கோவையில் நிகழ்ந்த கொடூரம்… இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை... காமக் வெறியர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!
பிருந்தாவன் நகரில் உள்ள தனியான இடத்திற்கு அழைத்துச் சென்று, அவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வன்கொடுமை சுமார் 5 மணி நேரம் நீடித்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து மயக்கம் தெளிந்த ஆண் நண்பர், உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார்.
இதையடுத்து, கோவை சிட்டி போலீஸ் 7 தனிப்படை குழுக்களை அமைத்து விசாரணையைத் தொடங்கியது. CCTV கேமரா காட்சிகள், சுற்று வாசல் விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில், குற்றவாளிகளின் தடயங்களைப் பின்தொடர்ந்த போலீசார், துடியலூர் அருகே பதுங்கியிருந்த 3 பேரையும் நள்ளிரவு 12 மணியளவில் சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். காலில் குண்டடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இச்சம்பவத்தை கண்டித்து பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் டார்ச் லைட் ஆர்ப்பாட்டம் நடத்தினர். “பெண்களின் பாதுகாப்புக்கு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் கோரியுள்ளனர். மேலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடைபெற்ற இடத்தின் அருகே செயல்பட்டு வந்த சட்டவிரோத பாருக்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர் மதுபானங்கள், உணவு பண்டங்களை அடித்துநொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை போலீஸ் கமிஷனர் வி. பாலகிருஷ்ணன், “முழு விசாரணை நடத்தி கடுமையான தண்டனை வழங்கப்படும்” என அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பாலியல் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ் மீதான பற்று..!! அசத்திய சுட்டிக்குழந்தை ஆதிரா..!! நான்கரை வயதில் வரலாற்று சாதனை..!!