தமிழ்நாட்டில் பட்டாசு தயாரிப்பதற்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சாத்தூர், மற்றும் அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளில் பட்டாசு உற்பத்தி ஒரு முக்கிய தொழிலாக விளங்குகிறது. இந்தியாவின் பட்டாசு தேவையில் கணிசமான பங்கு இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்தத் தொழில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் அதே வேளையில், அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள் தொழிலாளர்களின் உயிர்களைப் பறிப்பதோடு, பல குடும்பங்களைப் பேரழிவில் ஆழ்த்தி வருகின்றன.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மூலம் ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. எவ்வளவு வருமானம் இருக்கிறதோ அவ்வளவு ஆபத்தும் இந்த தொழிலில் இருக்கிறது. இப்படி ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை வரை 7 மாதங்களாக அடுத்தடுத்து தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: “கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தெரிகிறது” - தமிழக அரசியல் களத்தை அதிரவைத்த அண்ணாமலை...!
பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் தமிழ்நாட்டில், குறிப்பாக சிவகாசி பகுதியில், தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டு மட்டும் பல விபத்துகள் பதிவாகியுள்ளன. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 15-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள கோகுலேஸ் ஃபயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள சாய்நாத் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இவை மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் 7 விபத்துகளில் 37 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே நேற்று மீண்டும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. ஆண்டியாபுரத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விபத்து நடந்த தொழிற்சாலை உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

இதனிடையே, பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து சம்பவங்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அதேவேளை, வெடிவிபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்மேன்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு தொழிலக பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பயிற்சி வகுப்புகளில் பல பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் இந்த பயிற்சிகளில் பங்கேற்காத 215 பட்டாசு ஆலைகளுக்கு 16 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, பயிற்சியில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டனர். இந்த பயிற்சியில் 195 பட்டாசு ஆலைகள் பங்கேற்ற நிலையில், 20 பட்டாசு ஆலைகள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு, பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஏற்படும் வெடி விபத்துகளைத் தடுக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டது.
இதையும் படிங்க: குளறுபடிகளின் உச்சம்.. குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்.. இபிஎஸ் வலியுறுத்தல்..!!