பிரான்சில் வாழ்க்கைச் செலவு உயர்வு, பொது சேவைகள் சீரழிவு மற்றும் பள்ளி நிலைமை மோசம் ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில், உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனேஸின் ராஜினாமாவை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நிராகரித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 17) சுமார் 5.5 லட்சம் முதல் 8 லட்சம் பேர் வரை பங்கேற்ற போராட்டங்கள், முக்கிய நகரங்களில் கலவரமாக உருமாறின. லிமோஜ்ஸ் நகர மன்றக் கட்டிடம் தீக்கிரையானது உள்ளிட்ட பல அரசு கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன. கடைகள் சூறையாடப்பட்டன. போலீசாருடன் மோதல்கள் ஏற்பட்டன. 2,300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சுமார் ஆயிரம் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமையும் சில இடங்களில் சூறையாடல் தொடர்ந்தது.
இந்நிலையில், நூனேஸ் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். “நான் அனைத்துக்கும் பொறுப்பு. சில பெருநகரங்களில் காவல்துறை கட்டுப்பாட்டை இழந்தது. முன்னெச்சரிக்கை குறைபாடு இருந்தது” என அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் எலிசே அரண்மனை அறிக்கையில், “பாதுகாப்புப் படைகளில் தொடர்ச்சியான தலைமையை உறுதிப்படுத்த நூனேஸ் பதவியில் தொடர வேண்டும்” என மேக்ரான் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஐரோப்பிய தலைவர்களுக்கு டார்ச்சர்!! எலான் மஸ்க் மீது பிரான்ஸ் பகிரங்க குற்றச்சாட்டு! அந்நியத் தலையீடு!

கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கைக்கான புதிய செயல்பாட்டு முறைகளை உடனடியாக அமல்படுத்தவும், திட்டமிடல் மற்றும் உளவுத் தகவல் தோல்விகள் குறித்து வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மேக்ரான், வன்முறை செய்தவர்கள் கடுமையான தண்டனை பெறுவார்கள் என எச்சரித்தார். அமைதியான போராட்டம் அடிப்படை உரிமை என்றும், திட்டமிட்ட வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நூனேஸ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்தன. இடதுசாரி தலைவர் ஜீன்-லூக் மெலன்சோன், அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டினார். வலதுசாரித் தலைவர் மரின் லெ பென், அரசு செயலிழந்துவிட்டதாகக் குற்றம் சுமத்தினார். அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை முன்னிட்டு இந்த நிகழ்வு அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், “பிரான்ஸ் எரிகிறது! எல்லைகளை மூடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள்” எனக் குறிப்பிட்டு, குடியேற்றத்தை காரணமாகக் காட்டினார்.
இதையும் படிங்க: இந்திய தொழிலதிபர் சுனில் மிட்டலுக்கு உயரிய 'செவாலியே' விருது!! கௌரவித்த பிரான்ஸ்..!!