சமூக நீதி மற்றும் பெரியார் கொள்கைகளைப் பரப்புவோரைச் சிறப்பிக்கும் வகையில், கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு இந்த விருதை வழங்கி வருகிறது. இதுவரை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி முதல் விடுதலை ராஜேந்திரன் வரை பல ஆளுமைகள் இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த விருதின் நம்பகத்தன்மை மற்றும் அரசாணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, திராவிட இயக்க ஆதரவாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
டி. ஸ்ரீதர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "1994-ஆம் ஆண்டு முதல் பெரியார் விருது வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்; சுப.வீரபாண்டியன், விடுதலை ராஜேந்திரன், கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட விருதுகளைத் திரும்பப் பெற வேண்டும்" எனக் கோரியிருந்தார். மேலும், தான் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருவதால் தனக்கே அந்த விருதை வழங்க வேண்டும் என்றும் அவர் விசித்திரமான கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
இந்த மனுவிற்குப் பதிலளித்த பேராசிரியர் சுப.வீரபாண்டியன், "நான் இதுவரை 55 புத்தகங்களை எழுதியுள்ளேன், அதில் 13 புத்தகங்கள் தந்தை பெரியார் பற்றியவை. 'கருஞ்சட்டை தமிழர்' இதழ் மூலம் பெரியாரின் கொள்கைகளைப் பரப்பி வருகிறேன். இதற்காகவே எனக்கு விருது வழங்கப்பட்டது" எனத் தனது தகுதியை விளக்கினார். மேலும், 31 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரசாணையை எதிர்ப்பது சட்டப்படி செல்லாது என்றும், ஏற்கனவே இதே மனுதாரர் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: "நாளைக்கு காலையில 10:30-க்கு தான் தீர்ப்பு!" ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? கோர்ட் சொல்லப்போகும் அந்த பதில்!
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, சுப.வீரபாண்டியன் தரப்பு வழக்கறிஞர் சு. குமாரதேவன் மற்றும் இதர எதிர்மனுதாரர்களின் வாதங்களை ஏற்றுக்கொண்டார். 1994-ஆம் ஆண்டு அரசாணையை இவ்வளவு காலம் கழித்து எதிர்ப்பது நிலைக்கத்தக்கதல்ல எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு பெரியாரியச் சிந்தனையாளர்கள் மற்றும் திராவிடப் பேச்சாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: "ஆக்கிரமிப்பா? உடனே ஆபீசருக்கு போன் பண்ணுங்க!" ஹைகோர்ட் சொன்ன செம ஐடியா!