சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் முளைத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக எச்சரித்துள்ளது.
தலைநகரின் மிக முக்கிய வணிகப் பகுதியான என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரித் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைப்பது குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின் போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றச் சிறப்புத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது; அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் வராமல் தடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இப்பகுதி 'வியாபாரம் செய்யக் கூடாத பகுதி' என அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறி அறிக்கை தாக்கல் செய்தார். இருப்பினும், கடைகள் அகற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் முளைத்துவிடுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்குப் புகாராகக் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: "நாளை காலை 8 மணி.. மிஸ் பண்ணிடாதீங்க!" பொங்கல் ஸ்பெஷல் ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்!
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "ஆக்கிரமிப்புகளை அகற்ற நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் அலைபேசி எண்களைப் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் என்.எஸ்.சி போஸ் சாலையில் பெரிய அளவில் விளம்பரப் பலகைகளாக வைக்க வேண்டும்" என உத்தரவிட்டனர். மேலும், ஆக்கிரமிப்புகளைக் கண்காணிக்க இரண்டு வழக்கறிஞர்களைக் 'கௌரவ ஆணையர்களாக' நியமித்த நீதிபதிகள், அவர்கள் அளிக்கும் அறிக்கையில் மீண்டும் கடைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சென்னை குடிமகன்களே அலர்ட்!" காலி பாட்டிலுக்கு 10 ரூபாய்!” இன்று அமலாகிறது டாஸ்மாக் திட்டம்!