நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை நேரில் கண்காணித்து நெறிப்படுத்த, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு உயர்மட்டக் கண்காணிப்புக் குழுவை அமைத்துச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேலும், பக்தர்கள் சிரமமின்றித் தங்கி தரிசனம் செய்ய ஏதுவாகத் தற்காலிக காத்திருப்பு கூடங்கள், உணவு கூடங்கள், உடமைகள் பாதுகாப்பு அறைகள் மற்றும் நவீன கழிப்பறைகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் அரசுத் துறை அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக ஆணையிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா உலகப் புகழ்பெற்ற ஆன்மீகப் பெருவிழாவாகும்.
மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தைக் காணவும், 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் வலம் வரவும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 30 முதல் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்குத் திரள்வது வழக்கம்.
இதையும் படிங்க: எ.வ. வேலு, மகன் குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு: அறப்போர் இயக்கம் புகாரால் அதிரடி நடவடிக்கை!
ஆனால், கடந்த காலங்களில் போதிய அடிப்படை வசதிகள், சுகாதார ஏற்பாடுகள் மற்றும் தங்குமிடங்கள் இல்லாததால் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர்.
இந்தச் சூழலில், கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்குத் தடையற்ற குடிநீர், சுகாதாரம், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் முன்கூட்டியே முறைப்படி செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை முழுமையாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பக்தர்களின் பாதுகாப்பையும் அடிப்படை உரிமைகளையும் நிலைநாட்டும் வகையில் மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருப்பதாவது, திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும் அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகளை நேரில் கள ஆய்வு செய்து கண்காணிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அதிகாரமிக்க உயர்மட்டக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்படுகிறது.
இக்குழுவின் நேரடி மேற்பார்வையில் அனைத்துப் பணிகளும் தொய்வின்றி நடக்க வேண்டும்.
மேலும், கோவில் வளாகம், மாட வீதிகள் மற்றும் கிரிவலப் பாதையின் முக்கிய சந்திப்புகளில் பக்தர்கள் வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பாகத் தங்குவதற்குப் போதுமான தற்காலிக காத்திருப்பு கூடங்கள் (Shelter sheds) அமைக்கப்பட வேண்டும்.
பக்தர்கள் தங்களது உடமைகளைப் பாதுகாப்பாக வைத்துச் செல்வதற்குப் பொருட்கள் வைக்கும் அறைகள் (Cloak rooms), தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரமான முறையில் உணவு அருந்துவதற்கான விரிவான உணவு கூடங்கள் (Dining halls) நிறுவப்பட வேண்டும்.
குறிப்பாக, கிரிவலப் பாதை நெடுகிலும் மற்றும் நகரின் முக்கியப் பேருந்து நிலையப் பகுதிகளில் பெண்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் போதிய எண்ணிக்கையில் நவீனக் கழிப்பறைகள் மற்றும் நடமாடும் கழிவறை வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.
பக்தர்களின் வசதிகளை உறுதி செய்யவும், கூட்ட நெரிசலால் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் முன்கூட்டியே தடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழுவை அமைத்து இத்தகைய விரிவான உத்தரவுகளைப் பிறப்பித்திருப்பது, கார்த்திகை தீப தரிசனத்திற்காகத் தயாராகி வரும் கோடிக்கணக்கான சிவபக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு!