முன்னாள் அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும், சைவ வைணவ மதங்கள் குறித்தும் மிகவும் கீழ்த்தரமாக பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பொன்முடியிடம் இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும், பொன்முடி மீது சைவம் மற்றும் வைணவம் குறித்து இழிவாகப் பேசியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இது கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என்றும், மக்கள் பிரதிநிதியாக அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொன்முடிக்கு உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: பழசா? புதுசா? - பொன்முடிக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்... கண் அசைத்த ஸ்டாலின்...!

அப்போது பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்திருந்தார். மேலும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, சர்ச்சைக்குரிய வகையில் பொன்முடி பேசியது தொடர்பாக டிஜிபி மற்றும் காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, புலன் விசாரணை நடத்தப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பொன்முடி சர்ச்சை பேச்சு விவகாரத்தில் புலன் விசாரணை நடத்தவில்லை என்றால் வழக்கு சிபிஐ க்கு மாற்றப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இது போல் பேச வேண்டும் என்றும் கடுமையாக சாடியுள்ளது.
இதையும் படிங்க: பொன்முடி தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. ஜூன் 21ல் வரை கெடு விதித்திருக்கும் நீதிமன்றம்...!