திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு இடும்பன் கோயிலுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் திருடு போன வழக்கில், உரிய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நகைகளைப் பறிமுதல் செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால் வழக்கு விசாரணை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காவல்துறைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழனி அருள்மிகு இடும்பன் கோயில் தலைவர் மற்றும் பரம்பரை அறங்காவலரான ஏ. ராஜா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், பழனி அருள்மிகு இடும்பன் கோயில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 52 கிராம் எடை கொண்ட வெள்ளி வேல் மற்றும் அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 35 கிராம் தங்க ஆரம், தங்க நெக்லஸ், தங்கக் கழுத்தணி, 57 கிராம் எடையுள்ள தங்கச் செவ்வந்திப்பூ மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் மாயமாகியுள்ளன.

கோயிலுக்குச் சொந்தமான விலைமதிப்பற்ற நகைகள் காணாமல் போனதற்கு அப்போதைய செயல் அலுவலர் விமலா என்பவரே காரணம் எனத் தெரியவந்துள்ளது; இது தொடர்பாகக் கடந்த மே 30-ஆம் தேதி கோயில் செயல் அலுவலர் நரசிம்மன் பழனி தேவஸ்தான காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான விசாரணை நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எனவே காவல்துறையின் விசாரணையில் சந்தேகம் இருப்பதால், இவ்வழக்கை உடனடியாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள்.. போர்கால நடவடிக்கைக்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்.!!
இந்த மனு நீதிபதி விஜயகுமார் அவர்களின் அமர்வு முன்பு இன்று நேரடி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நகைகள் மாயமானது தொடர்பாகக் காவல்துறையின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது; எனவே விரிவான அறிக்கை தாக்கல் செய்யக் காவல்துறைக்கு 2 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அரசுத் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி, வெள்ளி வேல், தங்க நகைகள் என எதையும் இதுவரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை; நகைகளைத் திருடியது யார் என்பதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்து சமய அறநிலையத்துறைக்குக் கட்டுப்பட்ட ஒரு முக்கியமான கோயிலில் நகைகள் காணாமல் போன விவகாரத்தை ஒருபோதும் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது.
விரைந்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நகைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்; அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் வழக்கு விசாரணை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றப்படும் என எச்சரித்து, மனு குறித்துப் பழனி கோயில் காவல் ஆய்வாளர் உரிய பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் அப்படி பேசியிருக்க கூடாது..! மதிமுக குறித்த பேச்சுக்கு துரை வைகோ ஆதங்கம்.!!