புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா கோலாகலமாக நடைபெறும். இவ்விழாவில் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக வாஸ்து சாந்தியுடன் தொடங்கும் சித்திரை திருவிழா வரும் மே 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொடியேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மதுரை மாவட்டமே விழா கோலம் பூண்டு காட்சியளிக்கும்.
இதையும் படிங்க: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!
ஏப்ரல் 29ம் தேதி முதல் தொடங்கிய திருவிழாவில், ஏப்ரல் 30 ஆம் தேதி பூதம் மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா நடைபெற்றது. மே 1ஆம் தேதி கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகன உலாவும், மே 2 ஆம் தேதி தங்கப்பள்ளத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதேபோல் மே 3ஆம் தேதி தங்க குதிரை வாகன உலா மற்றும் வேடர் பறி லீலை நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மே 4 ஆம் தேதி, ரிஷப வாகன உலா மற்றும் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், நந்திகேஸ்வரர் மற்றும் யாளி உலா மே 5 ஆம் தேதியும், மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் மற்றும் ஊடல் உற்சவம் வெள்ளி சிம்மாசன உலா மே 6 ஆம் தேதியும் நடைபெற்றது.
மதுரையின் அரசியாக முடி சூட்டிய மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரரான சிவபெருமானுக்கும் கடந்த 8-ந் தேதி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. சுவாமி, அம்மனின் திருக்கல்யாணத்தை நேரில் காணாதவர்களும், ஜீவராசிகளும் தரிசிக்கும் வகையில் நேற்று முன்தினம் மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

சித்திரைப் பெரும் திருவிழாவின் 11ஆம் நாள் திருநாளான மே 9 ஆம் தேதி திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மே 11 ஆம் தேதியான இன்று காலையில் மதுரை மூன்று மாவடிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் வந்தடைந்த கள்ளழகருக்கு பிரமாண்டமாக எதிர்சேவை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளும் அவருக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன.
இன்று இரவு 11.30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. நள்ளிரவில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்து மதுரை கொண்டு வரப்பட்ட திருமாலையை ஏற்று அணிந்துகொண்டு, பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தொடர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் காட்சி தருகிறார்.

இதனிடையே சித்திரை திருவிழா நிகழ்ச்சியில் அழகருக்காக பயன்படுத்தப்படும் தங்க குதிரை வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை வந்தடைந்தது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் நாளை நடைபெறுகிறது. இதனை காண பக்தர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மதுரையில் கடலலையாய் மக்கள் திரண்டுள்ளதால், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதியில், மூன்றடுக்கு தடுப்பு வேலி அமைத்துள்ள போலீசார், பக்தர்களின் பாதுகாப்புக்காக `வைகை வீரன்' என்ற புகார் செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: போதையில் தகராறு.. இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் சரண்..!