மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் வழியாக பாஸ் உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், ஏராளமானோர் குவிந்து, தங்களை உள்ளே அனுமதிக்குமாறு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. சரியாக 7.40 மணிக்கு தொடங்கி, 8.10 மணிக்குள் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றன. இதைக் காண்பதற்காக பல லட்சம் மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காக 9,000 பாஸ்கள் ஆன்லைன் மூலமாக கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன.
நான்கு கோபுரங்களிலும் எந்தெந்த பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளனவோ, அந்த நிற பாஸ்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பாஸ் வைத்திருப்பவர்களையும் கடுமையான பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக தெற்கு கோபுரம் அருகே உள்ள நேதாஜி ரோடு சாலைப் பகுதியில் நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காக வந்த பக்தர்கள் சாலையோரத்தில் தங்கியும், படுத்துறங்கியும் கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காக ஒரு அங்குலம் கூட நகராமல் இங்கேயே காத்துக் கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: #BREAKING மதுரை குலுங்க...குலுங்க... கோபு கலசங்கள் மீது ஊற்றப்பட்டது புனித நீர்... மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்...!
இவர்களுக்கு பாஸ் இருந்தால் மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பக்தர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாஸ் உள்ளவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டால் நாங்கள் எங்கே செல்வது? பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெகு தொலைவில் இருந்து வந்திருக்கிறோம். குறைந்தபட்சம் கோவிலுக்குள்ளாவது அல்லது சித்திரை வீதியிலாவது எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பக்தர்கள் முழக்கமிட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்தக் கும்பாபிஷேகத்தைப் பார்ப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு, கடன் வாங்கிக்கொண்டு வெளியூரில் இருந்து வந்திருக்கிறார்கள். இப்படி கடவுளைப் பார்ப்பதற்கே தடுப்பது என்பது உண்மையிலேயே கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படாது. உள்ளே இருப்பவர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்தைப் பார்க்கிறார்கள். நாங்கள் வெளியிலிருந்து கோபுரத்தைப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். அதற்குக்கூட அனுமதி இல்லையென்றால் ஆண்டவனே மன்னிக்க மாட்டார். காரில் போகிறவர்கள் மட்டும்தான் மனிதர்களா? நாங்கள் மனிதர்கள் இல்லையா? என்ன சார், இது என்ன நியாயம்?. எங்களை இப்போது உடனடியாக விட வேண்டும் சார். இத்தனை பொதுமக்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம்? என அமைச்சர் நிர்மல் குமார் காரை வழிமறித்த பக்தர்கள் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு பதிலளிக்காத அமைச்சர் பொறுமையாக இருங்கள் என சொல்லிவிட்டு காரில் தொடர்ந்து சென்றதால், பக்தர்கள் மிகுந்த ஏமாற்றமும், மன வேதனையும் அடைந்தனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!