மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் திராங்லாவ்பி கிராமத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு வீட்டின் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் இரு சிறு குழந்தைகள் உயிரிழந்தனர். வெடிகுண்டு தாக்குதலால் அந்த வீடு முற்றிலும் சேதமடைந்தது. மலைப்பகுதியிலிருந்து கிராமத்துக்குள் குண்டுகள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அக்கம்பக்கத்து மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று, அகாம்பத் நிவாரண முகாமில் தங்கியிருந்த 7 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் காணாமல் போனார். பின்னர் சந்தேகத்துக்குரிய சூழலில் அவரது உடல் மீட்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் அந்தச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த இரு சம்பவங்களும் சேர்ந்து மொத்தம் மூன்று குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வன்முறைச் சம்பவங்கள் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் மீண்டும் நிகழக்கூடும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். மலைச் சரிவு பகுதிகளில் இருந்து குண்டுகள் வீசப்பட்டதால், அந்தப் பகுதியில் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் படைப்பிரிவுகளும் குவிக்கப்பட்டுள்ளன. பக்கத்து கிராமங்களை தீவிரமாகக் கண்காணிப்பதுடன், அருகிலுள்ள மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மணிப்பூர்: அதிரடி சோதனையில் இறங்கிய இந்திய ராணுவம்..!! 17 பேர் கைது; பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்..!!
மணிப்பூர் முதலமைச்சர் ஒய்.கே. சிங் இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சில தனிநபர்கள் அல்லது அமைப்புகள் இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் உள்ளிட்ட மூத்த எம்.எல்.ஏ.க்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார். ராணுவம், அசாம் ரைபிள்ஸ், மாநில போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளுடன் உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதியாக இருந்து, பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், இம்பால் நகரம், இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று கடைகள், சந்தைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. புதிய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 163-ன் கீழ் மாவட்ட மாஜிஸ்திரேட் பிறப்பித்த தடையுத்தரவைத் தொடர்ந்து இந்த நிலை உருவாகியுள்ளது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு சொத்துகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் உள்ளன. மக்களின் உயிர் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவங்கள் மணிப்பூரில் அமைதி மீட்புக்கான முயற்சிகளுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: மணிப்பூர்: அதிரடி சோதனையில் இறங்கிய இந்திய ராணுவம்..!! 17 பேர் கைது; பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்..!!