செப்டம்பர் 5ம் தேதியான நாளை (வெள்ளிக்கிழமை) அன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மிலாடி நபி திருநாளை வெகு விமரிசையாகக் கொண்டாட உள்ளனர். இந்த புனித நாள், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இஸ்லாமிய நாட்காட்டியின் ரபி உல்-அவ்வல் மாதத்தின் 12ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது.

முஹம்மது நபி கி.பி. 570இல் சவூதி அரேபியாவின் மக்காவில் பிறந்தவர். அன்பு, ஒற்றுமை, மற்றும் ஒழுக்கத்தைப் போதித்த இறைத்தூதராக இஸ்லாமியர்களால் போற்றப்படுகிறார். மிலாடி நபி திருநாளில், இஸ்லாமியர்கள் புதிய ஆடைகள் அணிந்து, சிறப்பு தொழுகைகளில் ஈடுபடுவர். குர்ஆன் ஓதுதல், நபி (ஸல்) அவர்களின் போதனைகளை நினைவுகூருதல் மற்றும் தொண்டு செய்தல் ஆகியவை இந்நாளின் முக்கிய அம்சங்களாகும்.
இதையும் படிங்க: வாக்காளர் உரிமை யாத்திரை!! ராகுல் காந்தியுடன் கைகோர்க்கும் மு.க.ஸ்டாலின்!!
சன்னி முஸ்லிம்கள் இதனை 12ஆம் நாளும், ஷியா முஸ்லிம்கள் 17ஆம் நாளும் கொண்டாடுவர். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், இந்நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஊர்வலங்கள், மத விழாக்கள், மற்றும் சமூக நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த ஆண்டு, பிறை தெரிவதைப் பொறுத்து தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பின்படி, செப்டம்பர் 5ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும். இந்நாளில், முஹம்மது நபியின் வாழ்க்கை மற்றும் அவரது ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவதற்கு உறுதியேற்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு மிலாடி நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். நபிகள் நாயகத்தின் பிறந்தநாளினைக் கொண்டாடிடும் அன்புக்குரிய இசுலாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் எனது மிலாது நபி வாழ்த்துகள்!
உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையோடு நடத்துதல் என உலகத்துக்கு என்றென்றும் தேவையான நற்கருத்துகளைப் போதித்த உயர்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபி அவர்கள். அவரது போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்திடும் இசுலாமிய உடன்பிறப்புகளின் உரிமைகளுக்கும், நலனுக்கும் என்றும் உழைத்திடும் அரசாகக் கழக அரசு ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும்போதும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை, சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவு என எண்ணற்ற நற்பணிகளை எப்போதும் கழக அரசு செய்யத் தவறியதே இல்லை. அண்மையில் கூட சென்னை விமான நிலையம் அருகே 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மைச் சமூகத்தினரின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்திடுவதில் நமது திராவிட மாடல் அரசு கண்ணும் கருத்துமாக இருந்து செயலாற்றி வருகிறது.

மேலும் இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழருக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆட்சிக்கு வந்ததுமே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, தமிழ்நாட்டில் CAA நடைமுறைப்படுத்தப்படாது என்று துணிச்சலோடு அறிவித்ததும் நமது திராவிட மாடல் அரசுதான்!
இப்படி உங்களில் ஒருவராகவே இருந்து செயல்படும் அரசின் சார்பில், எனது அன்பார்ந்த மிலாது நபி வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமரோ! முதல்வரோ! யாரா இருந்தாலும் டிஸ்மிஸ் தான்!! அமித் ஷா கையில் எடுக்கும் முக்கிய ஆயுதம்!!