முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓபன் சேலஞ்ச் கொடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். கள்ளக்குறிச்சியில் ஓப்பன் சேலஞ்ச் விட்ட முதல்வருக்கு பதில் தருவதாக நினைத்து உளறிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வெளிநடப்பு என புறமுது காட்டி ஓடுபவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கினால் மட்டும் போதுமா என்றும் பெயர் வைத்தால் குழந்தை தானாக வளர்ந்து விடுமா எனவும் கேள்வி எழுப்பினார். மாவட்டத்தை உருவாக்கினால் அதை நிர்வகிக்க கட்டிடம் வேண்டாமா என்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் 2024 ஆம் ஆண்டில் தான் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்றும் தெரிவித்தார்.
2015 சென்னை பெருவள்ளத்தின்போது தன்னார்வலர்கள் அளித்த நிவாரண பொருட்களில் ஜெயலலிதா படத்தை ஒட்டியது யார் என்று கேள்வி எழுப்பினார். அதிமுக திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு இவ்வாறு பதிலடி கொடுத்தார். பரமக்குடி துப்பாக்கி சூடு, கிரானைட் கொள்ளை, கொடநாடு கொலை, கூவத்தூர் கூத்துகள் நடந்தது யார் ஆட்சியில் என்று கேள்வி எழுப்பினார். மேலும் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை, நிர்மலாதேவி விவகாரம், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவை நடந்தது யாருடைய ஆட்சியில் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: என் ஓபன் சேலஞ்ச் PENDING முதல்வரே... ஹிண்ட் கொடுத்து வெளுத்து வாங்கிய இபிஎஸ்...!
மவுலிவாக்கம் கட்டட விபத்து மக்கள் நலப்பணியாளர்கள் போராட்டம் தர்மபுரி கலவரம் என சந்தி சிரித்தது யார் ஆட்சியில் என்றும் சிறப்பான ஆட்சி கொடுத்ததாக கூற உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா எனவும் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி ரகுபதி கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா கொண்டு வந்த இலவச லேப்டாப் திட்டத்தை நாங்கள் முடக்கவில்லை என்று விளக்கம் அளித்த அமைச்சர் ரகுபதி 2019 ஆம் ஆண்டு வரை மட்டுமே இலவச லேப்டாப் திட்டம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது என்று கூறினார். 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று சொன்னதும் பழனிச்சாமியின் அடிவயிறு ஏன் எரிகிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பத்து தோல்வி பழனிசாமியால் பீதி... 100 மாவட்ட செயலாளர்கள் கொடுத்த ஷாக்... விழிபிதுங்கும் அதிமுக...!