திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இது பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவபெருமான் அண்ணாமலையார் என்றும், அம்பாள் உண்ணாமுலையம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இந்த ஆலயம், ஆதி சங்கரர் பாடிய "அண்ணாமலை பதிகம்" மற்றும் அருணகிரிநாதரின் "திருப்புகழ்" ஆகியவற்றால் புகழ்பெற்றது. கோவிலின் முக்கிய அம்சமாக 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உள்ளது, இது சிவனின் அக்னி வடிவமாகக் கருதப்படுகிறது. பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையின் தனித்துவமான ஆன்மீக நிகழ்வாகும்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ. தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் நடந்து, அண்ணாமலையாரை வணங்குகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாவட்ட, மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த பலர் வந்தவண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க: என்னது.. அருணாசலமா..?? எடுங்க முதல்ல.. தி.மலை பேருந்துகளில் இருந்த அருணாசலம் பெயர் நீக்கம்!
இந்த கிரிவலம் ஆன்மீக சக்தியை வழங்குவதாகவும், மனதை அமைதிப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. பக்தர்கள் அஷ்ட லிங்கங்களை தரிசித்து, மலையைச் சுற்றி வருகின்றனர். குறிப்பாக, கார்த்திகை தீபத் திருவிழாவின்போது இந்த கிரிவலம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக இரண்டு முக்கியமான முன்னேற்றங்கள் விரைவில் அமலாகவுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்த அமைச்சர், இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதலாவதாக, பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கோவிலில் பிரேக் தரிசனம் (Break Darshan) வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது பக்தர்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, விரைவாக இறைவனை தரிசிக்க உதவும். இரண்டாவதாக, கட்டண தரிசன கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படவுள்ளது.

இந்தக் கட்டண உயர்வுடன், கட்டண தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், அமரும் வசதி மற்றும் கோவில் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த இரண்டும் பக்தர்களின் தரிசன அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவே அமல்படுத்தப்படுகின்றன. முன்னதாக அமைச்சர் சேகர்பாபு, ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்து, பக்தர்களுக்கு வாழைப்பழம் வழங்கி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், கோவிலுக்குள் செல்போன் பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்தத் திட்டங்களை விரைவாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. இந்த முயற்சிகள், பக்தர்களுக்கு சிறப்பான ஆன்மிக அனுபவத்தை வழங்குவதோடு, கோவிலின் நிர்வாகத்தையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என்ன ஒரு மனுஷனா கூட பார்க்கல.. அவங்களுக்கு சொத்தா.. விரக்தியில் Ex. மிலிட்டரி செய்த விபரீத செயல்..!