தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தனது மகன் விஜய பிரபாகரனுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்தும், கிளி வழங்கியும் சிறப்பான மரியாதை அளிக்கப்பட்டது.
வழிபாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, தமிழக அரசின் செயல்பாடு குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது; பல மக்கள் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. இந்த ஆட்சிக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றால் 50 விழுக்காடு நல்ல விஷயங்களுக்கும், 50 விழுக்காடு இன்னும் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளுக்கும் எனப் பிரித்து வழங்கலாம். வரும் 2026 தேர்தல் முடிவுகள் தெரிந்த பின்னரே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருமா என்பது உறுதியாகத் தெரியவரும்.
தென் மாவட்டப் பயணங்களை முடித்துக் கொண்டு, வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி சென்னை திரும்பிய பின்னர், தலைமைக் கழகத்திலிருந்து கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படியே கூட்டணி குறித்த முடிவு அமையும்; உரிய நேரத்தில் அது அறிவிக்கப்படும். மத்தியில் இருப்பவர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளுமே எங்களது தோழமைக் கட்சிகள்தான்; அனைவரும் எங்களுடன் நட்புடன் உள்ளனர். தேர்தல் தேதி மார்ச் மாதத்தில்தான் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது; எனவே கூட்டணி அறிவிப்பதில் எந்தக் காலதாமதமும் இல்லை.
இதையும் படிங்க: 2 நாள்ல முடிவ சொல்லுங்க!! பிரேமலதாவுக்கு செக் வைக்கும் பழனிசாமி! தேமுதிக யோசனை!
தற்போது தேமுதிக மேற்கொண்டு வரும் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' மற்றும் 'மக்கள் தலைவருடைய ரத யாத்திரை' ஆகிய இருவிதமானப் பிரச்சாரங்களுக்கும் மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்த நான்காம் கட்டப் பயணமானது கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளது.
இதையும் படிங்க: தேமுதிக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது! கூட்டணி ரகசியத்தை உடைக்காத பிரேமலதா!