முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (வயது 77) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலை 8 மணி அளவில் காலமானார். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது முதல் மனைவி பத்மாவதியின் மகனான முத்து, தனது தந்தையின் கலைத் துறை செல்வாக்கைப் பின்பற்றி 1970களில் தமிழ்த் திரையுலகில் நடிகராகவும், பின்னணிப் பாடகராகவும் பயணத்தைத் தொடங்கினார்.
‘பிள்ளையோ பிள்ளை’, ‘பூக்காரி’, ‘சமையல்காரன்’, ‘அணையா விளக்கு’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் இவர் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் இணைந்து நடித்த படங்கள் பல வெற்றி பெற்றன. அதுமட்டுமின்றி 2008இல் ‘மாட்டுத்தாவணி’ படத்தில் இசையமைப்பாளர் தேவாவின் இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். எம்ஜிஆருக்கு போட்டியாக திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட மு.க.முத்து, எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் அரசியல் மற்றும் திரையுலகில் இருந்து விலகினார்.

தந்தையுடனான மனஸ்தாபம் காரணமாக அரசியலில் இருந்து விலகி, தனித்து வாழ்ந்து வந்த மு.க முத்து, 2015 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு.. நயினார் நாகேந்திரன் இரங்கல்..!
தற்போது சென்னை ஈச்சம்பாக்கத்தில் மு.க.முத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த செய்தி அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.முத்துவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் மு.க.முத்து மறைவு காரணமாக திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மு.க.முத்து காலமானதையொட்டி அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மு.க.முத்துவின் மறைவுக்கு திமுகவினரும், பல்வேறு கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது என்று கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான திரு மு.க.முத்து அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூத்த புதல்வரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரரும் திரைப்பட நடிகருமான மு.க. முத்து அவர்கள் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்: தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், தளபதியார் ஸ்டாலினின் சகோதரரும், திரைத்துறையில் தடம் பதித்த அண்ணன் மு.க.முத்து அவர்களின் மறைவு செய்தி அறிந்து மீளா துயருற்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுவை சேர்ந்த பலரும், சினிமாத்துறையை சேர்ந்த பலரும் மு.க முத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து காலமானார்..!!