ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இயக்கம், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினால், ஜூலை 1-ஆம் தேதி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த இயக்கத்தை அறிவித்த முதலமைச்சர், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக இணைப்பதற்கு இலக்கு நிர்ணயித்தார். இந்த இயக்கத்தின் மூலம், திமுகவின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதோடு, அடுத்த தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு உறுதிமொழிகளை தந்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் சேர்ந்து, தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்பதாக முதலமைச்ச ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன் என்றும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்பதாகவும் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIR-க்கு எதிராக நிற்பேன் என்றும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்பதாகவும் கூறியுள்ளார். நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன் எனவும், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன் என்றும் ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல்னு வந்துட்டா திமுக-காரங்கள அடிச்சுக்க ஆளே இல்ல! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன் என்றும் எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிப்பட கூறினார்.
இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு நிலவரம் என்ன? திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் தீவிர ஆலோசனை