தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது, தமிழக வெற்றி கழக கூட்டத்திற்கு அதிக பாதுகாப்பு செய்யப்பட்டதாகவும், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறிவிட்டதாகவும் தெரிவித்தார். போதிய குடிநீர், உணவு போன்ற எந்த வசதியும் ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை என்றும் அதிமுக பிரச்சாரத்தின் போது நிகழ்ச்சி முறையாக ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே விஜயை பின்தொடர்ந்து வந்ததாகவும், கூட்ட நெரிசல் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு முன்கூட்டியே எச்சரித்ததாகவும் தெரிவித்தார். காவல்துறையின் எச்சரிக்கையும் மீறி பிரச்சார வாகனம் முன்னோக்கி சென்றதாக கூறினார். நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸும் கூட்டத்திற்குள் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

3 மணி முதல் 10 மணி வரை விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்கப்பட்டதாகவும் ஆனால் 12 மணிக்கு விஜய் வருவார் என பொதுச்செயலாளர் சமூக வலைதளங்கள் வாயிலாக கூறியதாகவும், அதனால் காலை முதலே கரூரில் கூட்டம் நெரிசல் அதிக அளவில் இருந்ததாகவும் கூறினார். ஆனால் விஜய் 7 மணி நேரம் தாமதமாக தான் வந்தார் என்று குறிப்பிட்டார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்க தான் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தது என்று பேரவையில் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்டு நெரிசலால் மயக்கமடைந்தவர்களை மீட்க மட்டுமே ஆம்புலன்ஸ் வந்ததாகவும், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற போது தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கியதால் மீட்பு பணிகள் பாதித்ததாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஏழு மணி நேரம் கழித்து தான் விஜய் வந்தார்… கரூரில் என்ன நடந்தது? சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்…!
கூட்டத்தில் ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து தகர கொட்டகையை அகற்றி வெளியேற முயன்றதாக தெரிவித்தார். கூட்டம் உள்ளே நுழைந்ததால், மின்சாரம் தாக்குவதை தடுக்க ஆப்பரேட்டர் மின்சாரத்தை துண்டித்துள்ளார் என்பதை குறிப்பிட்டு பேசினார். மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். இந்த துயரத்தை கேள்விப்பட்டதும் தன்னால் வீட்டில் இருக்க முடியவில்லை என்றும் அதனால் தான் உடனடியாக கரூருக்கு சென்றேன் என தெரிவித்தார். இந்த விவகாரத்தை அரசு சட்டப்படி கையாண்டதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்! கரூர் சம்பவம் இனி சிபிஐ வசம்... ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைப்பு...!