தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உணவு வழங்குபவர்களைத் தேர்வு செய்வதற்காக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் அறிவித்துள்ளது.
மொத்தம் 3 மாநகராட்சிகளில் 3 மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்களும், 112 நகராட்சிகளில் 113 சமையல் கூடங்களும் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றின் மூலம் காலை உணவு வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
தகுதி வாய்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், நகர்ப்புற வாழ்வாதாரக் குழுக்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "முதல்வரின் காலை உணவுத் திட்டம்"..! பெயர் மாற்றம்... விஜய் அரசின் அடுத்த மூவ்..!!
ஒப்பந்தப் புள்ளி ஆவணங்களை ஜூலை 27-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், ஒப்பந்தப் புள்ளிகள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 11 மணி வரை பெறப்படும் என்றும், அவை ஆகஸ்ட் 14-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்த காலை உணவுத் திட்டத்திற்கு நேற்றைய தினம் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், அதனை விரிவுபடுத்தவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டம், வருகிற செப்டம்பர் 17 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
மேலும், இதுவரை "முதல்வரின் காலை உணவுத் திட்டம்" என அழைக்கப்பட்ட இத்திட்டம், இனி "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தச் சூழலில்தான், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்குபவர்களைத் தேர்வு செய்வதற்கான டெண்டர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிறிஸ்தவர்களிடையே சாதிய பாகுபாடு... புள்ளி விவரத்துடன் சி.எம். விஜய்க்கு பறந்த முக்கிய கோரிக்கை...!