சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் பரபரப்பான அரசியல் நிகழ்வு நடைபெற்றது. அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். அமைச்சர்கள் புச்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் நடைபெற்ற இணைப்பு விழாவில் புதிதாக இணைந்தவர்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
இணைப்பு விழாவுக்குப் பிறகு பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், முதலமைச்சர் விஜய்யை பாராட்டி பேசினார். “அரசியலில் புயலை உருவாக்கி ஆட்சியமைத்து சரித்திர சாதனை படைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்” என்று கூறினார். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பது சரியா என்று யோசித்த பிறகே தவெகவில் இணைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“பணத்தை வைத்து ஆட்சிக்கு வந்துவிடலாம் என சிலர் எண்ணுகின்றனர்” என்று குறிப்பிட்ட விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாட்டமான நிலைக்கு சென்றுவிட்டதாக விமர்சித்தார். “42 ஆண்டுகள் அதிமுக உறுப்பினராகவும், 25 ஆண்டுகள் தீவிர அரசியலில் ஈடுபட்டவருமான நான், ஒரு தலைவர் சரியான முடிவெடுக்க தவறினால் அந்த இயக்கம் என்னவாகும் என்பதற்கு அதிமுகவே உதாரணம்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார்.
இதையும் படிங்க: தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

மேலும், “தொண்டன் ஒருவர் கொடி பிடித்தால்தான் இயக்கத்தின் தலைவர் கொடியேற்ற முடியும்” என்று கூறி, தொண்டர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த இணைப்பு அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுக்கு வலு சேர்க்கும் வகையில் மூத்த அதிமுக தலைவர்களின் வருகை அரசியல் சமன்பாடுகளை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமல்லபுரம் இணைப்பு விழா தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
இதையும் படிங்க: எண்ணிக்கை 7 ஆக உயர்வு... விடிந்ததுமே வெளியானது பரபர அறிவிப்பு... அதிமுகவுக்கு தவெக வைத்த அதிரடி செக்...!