திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் மிகப்பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட, தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் திமுக அரசு அதை செயல்படுத்த மறுத்ததைக் கண்டித்து, மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் என்பவர் மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்ததிலிருந்து சொல்லொண்ணா துயரத்தில் தவிப்பதாக கூறினார். திமுக அரசின் வீண் பிடிவாதத்திற்கு பலியானவரின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடவுளே இல்லை எனச் சொல்லும் பெரியாரின் சிலை முன்பே நான் எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன், அடுத்த ஆண்டிலாவது திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஒளிரட்டும் என ஆடியோக்களை ஆதாரமாகப் பதிவு செய்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பூர்ணசந்திரன் அவர்களது ஆன்மா எம்பெருமான் முருகனின் செவ்வொளியில் அமைதி பெறட்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் மலை மீது சந்தனக்கூடு திருவிழா நடத்தக்கூடாது... இஸ்லாமியர்களை மீண்டும் மீண்டும் சீண்டும் இந்து அமைப்புகள்...!
தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்டெடுக்க காலங்காலமாக போராடி வருகிறோம், ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து இனியும் நாம் தொடர்ந்து போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன், அறத்தின் துணை கொண்டு போராட்டக்களத்தில் நாம் கைகோர்த்து நிற்போம் என்றும் தெரிவித்தார். ஆனால், எந்தவொரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்பது என்றைக்குமே தீர்வாகாது எனவும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
எனவே, உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றவை என்பதைக் கருத்தில் கொண்டு இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்... நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது ஏன்? சரமாரி கேள்வி...!