தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் மூடப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள் இல்லாததால், குறிப்பாக சென்னையில் 147 மையங்கள் உட்பட மொத்தம் 501 மையங்கள் மூடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது மழலைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை பாதிக்கும் என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கன்வாடி மையங்கள் போடப்படுவதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனத்திற்குரியது என்றும் ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும், ஆரம்பகால வளர்ச்சியையும் கேள்விக்குறியாக்கும் இச்செயல், திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையைக் கோடிட்டு காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொஞ்சமாச்சு அக்கறை இருக்கா? கல்வித்துறை சீரழிக்கிறீங்க! வார்னிங் கொடுத்த நயினார்...

திமுக அரசு தங்கள் அற்ப அரசியல் வீம்புக்காக நிராகரித்து வரும் தேசிய கல்விக் கொள்கையில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்னிலை வழங்கவும், கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறையில் பயிற்சி அளித்து அங்கன்வாடி மையங்களைத் தொடக்கப் பள்ளி போலவே மாற்றி அமைப்பதற்கான முன்னோடியான முயற்சியும் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், வெற்று விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் திமுக அரசு, அங்கன்வாடி ஊழியர்கள் பற்றாக்குறையைச் சரி செய்ய முடியாமல் அங்கன்வாடி மையங்களையே மூடுவதற்கு ஆயத்தமாகி வருவதாக குற்றம் சாட்டினார்.

2021 தேர்தலின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு திமுக வழங்கிய வாக்குறுதி எண் 313 படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும் என்பது நான்காண்டுகள் ஆகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலில் அங்கன்வாடி பணியாளர்களுக்காக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்காத வகையில் அங்கன்வாடி மையங்களை மூடுவதைத் தவிர்த்து அவற்றைச் செவ்வனே நடத்திடவும் வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!